Surgical Strike Video: ராணுவ வீரர்களின் தியாகங்கள் மீது அரசியல் நடத்தக்கூடாது- காங்கிரஸ்
Surgical Strike Video: மோடியின் அரசாங்கம் நம் ராணுவ வீரர்களின் இரத்தத்தின் மீது அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கின்றது - காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்.
Surgical Strike Video: பாஜக நம் ராணுவ வீரர்களின் தியாகங்களையும், இரத்தத்தினையும் அரசியலாக்கி அதில் வாக்கு வங்கிகளை அதிகரிக்கும் நினைப்பினை கைவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பேச்சு...
Advertisment
நேற்று மாலை (27.06.2018) சில தேசிய ஊடகங்கள், 2016ஆம் ஆண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் வீடியோவினை வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா “மோடி அரசாங்கம் நம் ராணுவ வீரர்களின் தியாகங்களை பயன்படுத்தி அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை தேடிக்கொண்டிருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோக்களை வெளியிட்ட ஊடகங்கள், முறையே ராணுவ அதிகாரிகளின் அனுமதியுடன் அதைப்பெற்று ஒளிபரப்பியிருக்கின்றார்கள். இந்த வீடியோக்கள் அனைத்தும், ஆளில்லா விமானங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் ‘தெர்மல் இமேஜிங்’ கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்டவையாகும். இந்த வீடியோக்களில் தீவிரவாதிகள் கொல்லப்படுவதும், அவர்களின் பதுங்குக் குழிகள் அழிக்கப்படுவதும் பதிவாகியிருக்கின்றது.
இது தொடர்பாக மேலும் பேசிய சுர்ஜிவாலா “சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்த பின்பும் கூட 2016ல் 146 படைவீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆக இந்த தாக்குதலை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று கூறுவதினால் பயன் என்ன?” என்றும் வினவியுள்ளார்.
மோடி அரசு மற்றும் பாஜக, இந்திய ராணுவ வீரர்களின் செயலை தங்களின் ஆட்சியில் நடந்த மிக முக்கியமான நிகழ்வாக பெருமை பேசி வருகின்றது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளினால் ஏற்பட்ட இழப்புகளை தடுக்க இயலாத அரசாகவே இது இருக்கின்றது. அதனால் தான் இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு பின்பு, 146 ராணுவ வீரர்களை இழந்ததோடு, பாகிஸ்தான் ராணுவம் 1600 முறை போர் ஒப்பந்த விதிமுறைகளை மீறியிருக்கின்றது. 79 தீவிரவாத தாக்குதல்கள் 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து டிசம்பர் வரை அரங்கேறியிருக்கின்றது.’ என்றார்.