கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் ₹ 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் அணைகள் அனைத்திலும் நீர் நிரம்பத் தொடங்கிவிட்டன. மேலும் இதுவரை இல்லாத வகையில் சுமார் 22 அணைகளிலும் நீர் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இடுக்கி, வயநாடு, மற்றும் இதர சுற்றுவட்டாரப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட பினராயி விஜயன் இடுக்கி, அலாப்புழா, வயநாடு, எர்ணாக்குளம் மற்றும் கோழிக்கோடு பகுதிகள் இந்த மழையால் பெருத்த சேதம் அடைந்துள்ளன. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 29 பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் இணைந்து முப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்கும்படி முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 25 லட்சம் ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளனர்.