நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சிபிரை விசாரணை நடத்தும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் என்ன கூறியுள்ளது?
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்தியாவில் உள்ள அவருடைய வீட்டில் ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணைகளை சிபிஐ ஏற்று நடத்தும் என்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் விசாரணைக்கு உதவவும், வழக்கு தொடர்பாக இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா காவல்துறையை உச்ச நீதிமன்றம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக அவருடைய தந்தை பாட்னாவில் வழக்குப் பதிவு செய்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன கூறியுள்ளது:
உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் தலைமையிலான ஒரு நபர் நீதிபதி அமர்வு, “வாழ்பவர்களுக்கு மட்டும் கிடைப்பதால் நீதி மேலோங்காது. மரணத்திற்குப் பிறகும் நீதி கிடைக்கும்போது உண்மை சூரிய ஒளியை சந்திக்கும். இப்போது இந்த உலக வாழ்வை விட்டு புறப்பட்டவர்களும் அமைதியடைவார்கள். வாய்மையே வெல்லும்” என்ரு குறிப்பிட்டுள்ளார்.
* மகாராஷ்டிரா காவல்துறைக்கும் பீகார் காவல்துறையினருக்கும் இடையிலான வாதத்தில் உச்ச நீதிமன்றம், “இந்த வழக்கில் மும்பை போலீசாரின் அதிகார வரம்பு உள்ளது. ஆனால், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, விசாரணையில் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்கும், இந்த விஷயத்தில் முழுமையான நீதியை நிலைநாட்டுவதற்கும், 142வது பிரிவு மற்றும் சிபிஐ விசாரணையின் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவது பொருத்தமானது என்று கருதுகிறது.” என்று தெரிவித்துள்ளது.
* சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக வரும் காலத்தில் வேறு ஏதேனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், அதை மத்திய விசாரணை முகமை விசாரிக்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிரா அரசு எதிர்க்க மறுத்துவிட்டது. மும்பை காவல்துறையினர் சி.ஆர்.பி.சி 174 பிரிவின் (தற்கொலை குறித்து விசாரித்தல்) கீழ் விசாரணை நடத்துவது ஒரு திட்டவட்டமான நோக்கத்திற்காக மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், சி.ஆர்.பி.சி 157 பிரிவின் கீழ் நடத்தப்படும் குற்ற விசாரணை அல்ல. சுஷாந்த் மரணம் தொடர்பாக வேறு ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டால், அதை சிபிஐ மட்டுமே விசாரிக்கும்.” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
* இருப்பினும், உச்ச நீதிமன்றம் மும்பை காவல்துறையினரின் எந்தவொரு தவறையும் நிராகரித்துள்ளது. “இதற்கு முன் தயாரிக்கப்பட்ட வழக்குப்பதிவுகள் மும்பை காவல்துறையினரின் எந்தவொரு தவறான செயலையும் முதன்மையாகக் கூறவில்லை. இருப்பினும், மும்பையில் பீகார் போலீஸ் குழுவுக்கு அவர்கள் ஏற்படுத்திய தடையைத் தவிர்க்க முடியும். ஏனெனில் இது அவர்களின் விசாரணையின் பொறுப்புணர்ச்சியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பாட்னாவில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ மும்பைக்கு மாற்றுமாறு நடிகர் ரியா சக்ரவர்த்தி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுஷாந்த்தின் தந்தை அளித்த புகாரின் பேரில், பாட்னா போலீசார் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, ரியா சக்ரவர்த்தி உச்ச நீதிமன்றத்தை நாடினார். எஃப்.ஐ.ஆரில் ரியா சக்ரவர்த்தி மற்றும் 5 பேர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி செய்தல், மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் ஆகிய குற்றங்களை சாட்டினார்.