இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக, அப்பெண் விசா பெற மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவினார்.
வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி நாடுவோருக்கு உடனடியாக உதவி வருகிறார். குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக, இந்தியா வருவதற்கு அவர்களுக்கு எளிதில் விசா கிடைக்க உதவி வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக, அப்பெண் விசா பெற சுஷ்மா ஸ்வராஜ் உதவினார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த நகி அலிகான் (வயது 27) என்பவருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த சபாஹத் பாத்திமா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், பாத்திமா பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால், இந்தியா வருவதற்கு விசா பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் இவர்களது திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில், தன் திருமணத்திற்கு இந்தியா வருவதற்காக விசா கிடைக்க உதவி புரியுமாறு சுஷ்மா ஸ்வராஜின் உதவியை ட்விட்டரில் நாடினார் பாத்திமா. இதையடுத்து, அவருக்கு விசா கிடைக்க உதவி செய்தார் சுஷ்மா ஸ்வராஜ். இதன்பின், நகி அலிகான் மற்றும் பாத்திமாவின் திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை லக்னோவில் நடைபெற்றது.
சுஷ்மா ஸ்வராஜின் உதவிக்கு தம்பதிகள் இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.