Sushma Swaraj emotional connections with Tamil Nadu : ஆண்கள் மட்டுமே நீடித்து நிற்கும் இந்திய அரசியல் உலகில் அவ்வபோது தான் பெண் “தலைவர்கள்” உருவாகின்றார்கள். உருவாக்கப்படுகின்றார்கள். சட்டமன்றம், முதல்வர், நாடாளுமன்றம், எதிர்கட்சித் தலைவர், கேபினட் அமைச்சர் என்று இந்திய அரசியல் படிநிலைகளில் அனைத்து இடங்களையும் பார்த்து இந்திய அரசியலை நின்று நிதானமாக கற்றவர் சுஷ்மா ஸ்வராஜ் என்றால் மிகையாகது. யாரும் எதிர்பாராத நிலையில் செவ்வாய் கிழமை இரவு (06/08/2019) அன்று, மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். இந்த செய்தி, பாஜகவினரை மட்டுமல்லாமல், நம் தேசம் விட்டு வேறு தேசங்களுக்கு சென்று துன்பங்களில் உழன்று, சுஷ்மாவால் மீண்டவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
Sushma Swaraj emotional connections with Tamil
திமுகவும், பாஜகவும் எதிர்கட்சிகள் தான். ஆனாலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவும், சுஷ்மா ஸ்வராஜூம் நெடுநாள் நண்பர்கள். இந்த மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பே சுஷ்மா ஸ்வராஜ்ஜை பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த திருச்சி சிவாவை போனில் அழைத்து தன்னுடைய புதிய வீட்டிற்கு வரவேற்றார் சுஷ்மா ஸ்வராஜ். செவ்வாய் கிழமை (06/08/2019) காலை 10 மணி முதல் 11 மணி வரை நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அன்று இரவே சுஷ்மா ஸ்வராஜ் மரணமடைந்தது திருச்சி சிவாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“அச்சமில்லை அச்சமில்லை” பாடிய சுஷ்மா ஸ்வராஜ்
2000ம் ஆண்டின் போது டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த சுஷ்மா ஸ்வராஜூக்கு பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை பாடலின் சில வரிகளை திருச்சி சிவா சொல்லிக் கொடுத்துள்ளார். 2001ம் ஆண்டு பாராளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பிறகு சுஷ்மா ஸ்வராஜ் மிகவும் கம்பீரமான குரலில் பாரதியின் இந்த வரிகளை நினைவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு வந்தால் மல்லிகை சூடிக் கொள்ளும் சுஷ்மா ஸ்வராஜ்
அவருடையநினைவுகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்ற நிலையில் சுஷ்மாவிற்கும் சென்னைக்குமான உறவு கொஞ்சம் இனிமையானது தான் என்கிறார் தமிழக பாஜகவின் முன்னாள் துணைத் தலைவர் லலிதா சுபாஷ். 2004ம் ஆண்டு சுஷ்மா ஸ்வராஜ் பாதயாத்திரை ஒன்றிற்காக அந்தமான் செல்வதற்காக சென்னை வந்துள்ளார்.
தன் குடும்பத்துடன் வந்த அவர், தன் மகளுக்கு செருப்புகள் வாங்க திட்டமிட்டார். லலிதா சுபாஷூடன் சென்னையின் பாண்டி பஜாரினை அங்குல அங்குலமாக அளந்து, கடைசி வரை சென்று, சென்னை பஜார்களை ரசித்தவர் சுஷ்மா என்கிறார் அவருடைய தோழி. சுஷ்மா, ஒரு செருப்புக் கடையில் மகளுக்காக இரு ஜோடி செருப்புகள் வாங்க, லலிதா பேரம் பேசி அந்த செருப்புகளை 200 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது சுஷ்மா “அவர் என்ன கேட்கின்றாரோ அந்த பணத்தை கொடுத்துவிடுவோம்... ஏன் வீணாக பேரம் பேசுகின்றாய்... டெல்லியாக இருந்தால் நான் ரூபாய் 1200 கொடுத்துருப்பேன்” என்று கூறியுள்ளார்.
டெல்லியில் இருந்து எப்போது சென்னை வந்தாலும் சுஷ்மா விரும்பி செய்யும் ஒரு விசயம் மல்லிப் பூ வாங்கி சூடிக் கொள்வதாம். அதனால் சுஷ்மா ஒவ்வொரு முறையும் சென்னை வரும் போது அவருக்காக ஆசையாக மல்லிகைப் பூ வாங்கி வைப்பாராம் லலிதா சுபாஷ்.
மேலும் படிக்க : இந்திய பெண் அரசியல் தலைவர்களில் தன்னிகரற்ற தலைவர்.. சுஷ்மா ஸ்வராஜ் அரிய புகைப்படத்தொகுப்பு!