மீராகுமார் மீது சுஷ்மா பாய்ச்சல்!

எதிர்க்கட்சித் தலைவரை மீராக்குமார் நடத்திய விதம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா......

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதன் வேட்பாளராக, பிகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார் . அதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராக்குமார் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், எதிர்க்கட்சி வேட்பாளரான மீராக்குமாரை நேரடியாக சாடியுள்ளார். நாட்டின் இரு பெரும் தேசியக் கட்சிகளும் தங்களின் எதிர்த்தரப்பு வேட்பாளரை மறைமுக வார்த்தை போரால் சாடி வரும் நிலையில், சுஷ்மா நேரடியாக சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஆறு நிமிடம் 23 நொடிகள் அடங்கிய வீடியோ ஒன்றுடன், “எதிர்க்கட்சித் தலைவரை மீராக்குமார் நடத்திய விதம் இது தான்” என தனது டுவிட்டர் பக்கத்தில் சுஷ்மா பதிவிட்டுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு அப்போதைய மக்களவை சபாநாயகராக மீராக்குமார் இருந்த போது அவையில் நடைபெற்ற சம்பவத்தை அந்த வீடியோ மூலம் சுட்டிக் காட்டியுள்ள சுஷ்மா, “சுஷ்மாவின் 6 நிமிட பேச்சில் 60 முறை குறுக்கீடு செய்த சபாநாயகர்” என இதுதொடர்பாக வெளிவந்த செய்தி குறித்தும் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா, அப்போதைய ஆளுங்கட்சியின் ஊழல்கள் குறித்து, குறிப்பாக, நிலக்கரிச் சுரங்க முறைகேடு குறித்து பேச முற்பட்டபோது, அவரை பேச விடாமல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அப்போதைய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த கமல்நாத்தை பேச அழைத்தது என்பன உள்ளிட்ட காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

தன்னை பேச விடாமல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை அக்கட்சித் தலைவர் சோனியா தூண்டி விடுகிறார் என அப்போதே குற்றம் சாட்டிய சுஷ்மா, சபாநாயகர் மீராக்குமார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், சபாநாயகர் அழைப்பு விடுக்கும் அனைத்து கூட்டங்களையும் தங்களது கட்சி புறக்கணிக்கும் என பகிரங்கமாக அறிவித்த சுஷ்மா, அதே மாதத்தில் சபாநாயகர் மீராக்குமார் அழைப்பு விடுத்த தேநீர் விருந்தை பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் சேர்ந்து புறக்கணித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

×Close
×Close