சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரிசி திருடியதாக சந்தேகத்தின் பேரில் தலித் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் பழங்குடியினர் ஒருவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது கும்பல் படுகொலை வழக்கு என்று ஆர்வலர்கள் கூறினாலும், பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) குற்றத்தின் வரையறையின் கீழ் இது வராது என்று போலீசார் தெரிவித்தனர்.
துமர்பள்ளி கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபர் வீரேந்திர சித்தார் (50) போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், அதிகாலை நேரத்தில் வீட்டில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்த போது பஞ்ச்ராம் சார்த்தி என்ற புட்டு (50) என்ற நபர் எனது வீட்டிற்குள் பதுங்கி அரிசி பையைத் திருட முயன்றதைக் கண்டதாகவும் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், பக்கத்து வீட்டுக்காரர்களான அஜய் பிரதான் (42), அசோக் பிரதான் (44) ஆகியோரை அழைத்து, அவர்கள் 3 பேரும் சேர்ந்து, சார்த்தியை மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
கிராம சர்பஞ்ச் இந்த சம்பவம் குறித்து காலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் குழு காலை 6 மணிக்கு சம்பவம் இடத்திற்கு சார்த்தி மயக்கமடைந்து மரத்தில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். சார்த்தி மூங்கில் குச்சிகளால் தாக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டிருந்தாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் பிஎன்எஸ் பிரிவு 103 (1)ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, சமூக ஆர்வலர்கள் இந்த வழக்கில் கும்பல் கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
“அவரைத் தாக்கியதன் பின்னணி என்ன என்பது முக்கியமில்லை. அவர்களால் சட்டத்தை எப்படி கையில் எடுக்க முடியும்? இது ஒரு கும்பல் கொலை வழக்கு, ”என்று வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான டிகிரி பிரசாத் சௌஹான் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
ஆனால் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டபோது, இந்த வழக்கு "பி.என்.எஸ் பிரிவு 103 (2)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“