கத்தார் நாட்டுக்கான இந்திய தூதரகம், தோஹாவில் தாலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்கள் ஆன நிலையில், புதுடெல்லியின் உடனடி கவனம் நாட்டிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண் பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்த தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் தாயகம் திரும்புவது குறித்து விவாதிக்கவும் இந்தியா இந்த ஆலோசனைக் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டது என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை தெரிவித்தார்.
கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் மற்றும் தோஹாவில் உள்ள தாலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் ஆகியோரின் சந்திப்பைப் பற்றி பேசிய அரிந்தம், நேர்மறையான கருத்துகளை தாலிபான்களிடம் இருந்து பெற்றோம் என்று கூறினார்.
20 ஆண்டுகால போருக்கு முற்றுப்புள்ளி வைத்து அமெரிக்கா காபூலில் இருந்து வெளியேறிய பின்னர் செவ்வாய்க்கிழமை அன்று தாலிபான்களுடன் முதன்முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது புது டெல்லி.
தாலிபான்களின் ஆட்சியை இந்தியா ஆதரிக்குமா என்ற தொணியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, இது வெறும் ஆலோசனைக் கூட்டம் மட்டுமே. இவை மிகவும் ஆரம்ப கட்டம் தான் என்று தான் நினைப்பதாக அரிந்தம் கூறினார்.
தாலிபான்களுடன் வருங்காலத்தில் அதிக அளவிலான பேச்சுவார்த்தைகளை இந்தியா மேற்கொள்ளுமா என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறிய அவர், அதைப் பற்றி தான் ஊகிக்க விரும்பவில்லை என்றும், அது தொடர்பான செய்திகளை வெளியிட தன்னிடம் எந்த விதமான அப்டேட்களும் இல்லை என்றும் அவர் விளக்கினார்.
ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்ட மற்ற இந்தியர்களை அழைத்து வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, காபூல் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வர துவங்கும் போது இந்தியா இது குறித்து மறுபரிசீலனை மேற்கொள்ளும் என்று பாக்சி தெரிவித்தார்.
தாலிபான்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் மிட்டல் மற்றும் ஸ்டானெக்ஸாயின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் முன்கூட்டியே திரும்புவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் பிரஜைகள், குறிப்பாக சிறுபான்மையினர், இந்தியாவுக்கு வருகை தர விரும்பும் நபர்களின் பயணம் குறித்தும் விவாதிக்கப்பட்டது ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மண் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்காக எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று மிட்டல் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். பதில் அளித்த தாலிபான் பிரதிநிதி, இந்த பிரச்சனை சாதகமான முறையில் தீர்க்கப்படும் என்று கூறினார்.
கடந்த வருடம் வரை பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் - ஈரான் நாடுகளுக்கான இணைச் செயலாளராக வெளியுறவுத்துறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திரா டண்டன் இதற்கு முன்பு இணைச் செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் சூழ்நிலைக்கு இந்திய பதிலை வடிவமைப்பதில் மிட்டலும், அவருக்கு அடுத்து பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் - ஈரான் நாடுகளுக்கான இணைச் செயலாளாராக பணியாற்றி வரும் ஜே.பி. சிங் ஆகியோர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
ஆகஸ்ட் 15 அன்று காபூல் வீழ்ச்சியடைவதற்கு முந்தைய நாட்களில் மிட்டல் மற்றும் சிங் ஆப்கானிஸ்தான் தலைவர் அப்துல்லா அப்துல்லாவை சந்தித்தனர். ஆப்கானிஸ்தானின் முன்னாள் தலைமை நிர்வாகியும் தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலின் தலைவருமான அப்துல்லா, புதிய அரசாங்கத்தில் பதவியை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு இந்தியாவின் உடனடி முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதை தொடந்து மிட்டல் மற்றும் ஸ்டானெக்ஸாய் இடையேயான சந்திப்பு நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முந்தைய வார இறுதியில், , ஸ்டானெக்ஸாய், இந்தியா இந்த துணைக் கண்டத்தில் மிக முக்கியமான நாடு. தாலிபான்கள் ஆட்சி, கடந்த காலத்தில் இருந்தது போலவே ஆப்கானிஸ்தானின் கலாச்சார, பொருளாதார, அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை இந்தியாவுடன் தொடரும் என்று கூறினார்.
1996 ஆம் ஆண்டில், காபூலை தலிபான்கள் முதன்முதலில் கைப்பற்றிய பின்னர் ஸ்டானெக்ஸாய் துணை வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, அவர் இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டார். அந்த நேரத்தில் இந்தியா அவரை சந்திக்கவோ அல்லது பதிலளிக்கவோ இல்லை.
கடந்த இரண்டு வாரங்களில் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர்கள் சுஹைல் ஷாஹீன் மற்றும் ஜபிபுல்லா முஜாஹித் ஆகியோர் இந்தியாவுடனான உறவு குறித்து கருத்துகளை வெளியிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.