டெல்லி மாநகராட்சியின் தேர்தல் நேற்று (டிசம்பர் 05) நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு சாதகமாக வந்துள்ளது. இதில் பாஜக 2-வது இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கு இணையாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஓய்ந்து நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில், 50.47 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிலவரங்கள் வெளியாக தொடங்கிவிட்டன.
இந்த கருத்துக்கணிப்பு முடிகளின் படி டெல்லியில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும், பாஜகவுக்கு 2-வது இடமும் கிடைத்துள்ளது. இது குறித்து இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 149 முதல் 171 இடங்களை கைப்பற்றும் என்றும், பாஜக 69 முதல் 91 இடங்களைப் பெறும் என்றும், காங்கிரஸ் 3 முதல் 7 இடங்களைப் பெறும் என்றும் கூறியுள்ளது.
அதேபோல் மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு 5 முதல் 9 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 126 இடங்களைப் பெறும் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெற்று அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின்படி, ஆம் ஆத்மிக்கு 146 முதல் 156 இடங்களும், பாஜக 84 முதல் 94 இடங்களும், காங்கிரஸுக்கு 6 முதல் 10 இடங்களும் கிடைக்கும். மற்றவர்களுக்கு 0 முதல் 4 இடங்கள் கிடைக்கும் என கூறியுள்ளது.
நியூஸ் எக்ஸ் – ஜன் கி பாத் கருத்துக் கணிப்பிப்படி ஆம் ஆத்மிக்கு 159 முதல் 175 இடங்களும், பாஜக 70 முதல் 92 இடங்களும், காங்கிரசுக்கு 4 முதல் 7 இடங்களும் கிடைக்கும் என்றும், மற்றவைகளுக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று கூறியுள்ளது.
2017 தேர்தலில், 272 இடங்களில் பாஜக,181 இடங்களையும், ஆம் ஆத்மி 48 இடங்களையும், காங்கிரஸ் 30 இங்களிலும் வென்றது. அப்போது பாஜகவின் வாக்கு சதவீதம் 36% ஆகவும், ஆம் ஆத்மி கட்சி 26% ஆகவும், காங்கிரஸுக்கு 21% ஆகவும் இருந்தது. இந்த தேர்தலில் 50.47% சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுளளது. இது 2007 (48%)முதல் நகராட்சித் தேர்தலை விட மிகக் குறைவு.
2007 மற்றும் 2022 க்கு இடையில் 15 ஆண்டுகள் டெல்லி மாநகராட்சியை பாஜக ஆட்சி செய்தது. இதில் 2012 இல் மூன்றாக பிரிக்கப்பட்ட பிறகும் மூன்று மாநகராட்சிகளையும் (வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு) பாஜக வென்றது. ஆனால் அக்கட்சிக்கு எதிராக நிதி முறைகேடு, திடக்கழிவு மேலாண்மை மற்றும் ஊழல் ஆகிவற்றிற்கு எதிராக ஆம் ஆத்மி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
கழிவு மேலாண்மை, சிறிய சாலைகளை பராமரித்தல், மாநகராட்சிப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி, சந்தைகளை பராமரித்தல், சொத்து வரி வசூல் போன்ற அனைத்து குடிமைப் பிரச்சினைகளும் டெல்லி மாநகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.
இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சி தேர்தலுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக டெல்லியில் பிரச்சாரம் செய்து வருகிறது, அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஊழல் மற்றும் குப்பை பிரச்சினைகள் குறித்த நிலையான பிரச்சாரத்தை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த கருத்துக்கணிப்புகளின் முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சிக்குஒரு சில இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று இந்த தேர்தலில் அக்கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் :
இந்தியா டுடே – டெல்லி மாநகராட்சி 2022தேர்தலுக்கான ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்ப
மொத்த இருக்கைகள் – 250
ஆம் ஆத்மி கட்சி – 149 முதல் 171 வரை
பாரதிய ஜனதா கட்சி – 69 முதல் 91 வரை
காங்கிரஸ் – 3 முதல் 7 வரை
மற்றவை – 5 முதல் 9 வரை
டைம்ஸ் நவ்
ஆம் ஆத்மி கட்சி – 146 முதல் 156 வரை
பாஜக – 84 முதல் 94 வரை
காங்கிரஸ் – 6 முதல் 10 வரை
மற்றவை – 0 முதல் 4 வரை
நியூஸ் எக்ஸ்
ஆம் ஆத்மி கட்சி —159 முதல் 175 வரை
பாஜக – 70 முதல் 92
காங்கிரஸ் – 4 முதல் 7 வரை
மற்றவை – 1
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil