காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரிம் கோர்ட் இறுதி தீர்ப்பில் தமிழகத்துக்கு தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. ஆனாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாது’ என்று சொன்னார். இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தன. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க திட்டமிட்டனர். ஆனால், பிரதமர் நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை.
நேற்று நாடாளுமன்றம் மாநிலங்களவை கூடியதும், அதிமுக எம்.பி.க்கள் அவையின் மையத்துக்கு வந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து சபை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள் அனைவரும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தர்ணா போராட்டம் நடத்தினர்.