கர்நாடக எல்லையில் நின்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையின் காரை மறித்த தமிழக போலீசார், நீங்கள் யார்?, நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
வாகன பாஸ்களை தவறாக பயன்படுத்துவதை சரிபார்க்க, அமைச்சர் பசவராஜ் பொம்மை நகரம் முழுவதும் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், கர்நாடகாவுக்கு சொந்தமான இடத்தில் அமைச்சர் காரை தமிழக போலீசார் தடுத்து நிறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பசவராஜ் பொம்மை உடனடியாக பெங்களூரு ஊரக மாவட்ட எஸ்.பி. ரவி டி சன்னன்னவரை அழைத்து, கர்நாடக பகுதியில் தமிழக போலீசார் எவ்வாறு இருக்கிறார்கள் என்று கேட்டு, கர்நாடக போலீஸை எல்லையில் நிறுத்தி தமிழக போலீஸை வெளியேற்றுமாறு அறிவுறுத்தினார்.
கர்நாடக எல்லையில் தமிழக காவல்துறையினர் தடுப்பை வைப்பது குறித்தும் பசவராஜ் பொம்மை ட்வீட் செய்துள்ளார். “இன்று நான் நகரில் நடத்தி பல பகுதிகளை ஆய்வு செய்தேன். இந்த நேரத்தில் கர்நாடக எல்லையில் தமிழக போலீசார் தடுப்புகளை வைத்திருப்பதை நான் கவனித்தேன். உடனடியாக பெங்களூரு ஊரக போலீஸ் எஸ்.பி.க்கு அழைப்பு விடுத்து, தடுப்புகளை வெளியேற்றுமாறு அவருக்கு அறிவுறுத்தினேன்" என்று பொம்மை ட்வீட்டில் தெரிவித்தார்.
ரவி டி சன்னன்னவர் கூறுகையில், "காவல்துறையினருக்கு தமிழ்நாடு பக்கத்தில் எந்த நிழலும் இல்லாததால், அவர்கள் கர்நாடகா பக்கத்திற்குள் நுழைந்து தடுப்புகளை அமைத்துள்ளனர், நாங்கள் தமிழக காவல்துறையினருக்கு தடுப்புகளை அகற்றுமாறு அறிவித்துள்ளோம், அவர்கள் அதை அகற்றிவிட்டார்கள்" என்றார்.
சோதனையின்போது, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் மற்றும் குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் சந்தீப் பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர். உள்துறை அமைச்சர் தமிழக போலீஸாரால் விசாரிக்கப்படுகிறார் என்ற செய்தி கிடைத்தவுடன், அவர்கள் அமைச்சருக்கு உதவ சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil