ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படும் ஒரு கலாச்சார நிகழ்வு. சாதி மற்றும் சமூக வரம்புகளுக்கு அப்பாற்பட்டது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்பு ஜல்லிக்கட்டு மீதான தடை தமிழக மக்களின் கலாச்சார அடையாளத்திற்கு எதிரான தாக்குதலாக பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு இதனை விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன் விசாரித்து முடிக்க வேண்டும் என முறையிட்டார்.
அதேபோல், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த அரசியல் சாசன அமர்வு எழுத்துப் பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு நேற்று (நவம்பர் 24) உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வ வாதங்களை தாக்கல் செய்தது. தமிழகத்தில் 2014 மற்றும் 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் பேராட்டத்தில் குதித்தனர்.
இந்தநிலையில் 2017-ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் மற்றும் ஜல்லிக்கட்டு நடத்துதல் விதிகள் என மாநில அரசின் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பபட்டு ஒப்பதல் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
தமிழக அரசின் சிறப்பு சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்தநிலையில் நேற்று தமிழக அரசு விசாரணை அமர்வில் தாக்கல் செய்த எழுத்துப் பூர்வ வாதத்தில் கூறியிருப்பதாவது, “ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சார நிகழ்வு. பல நூற்றாண்டுகள் பழமையான மற்றும் ஒரு சமூகத்தின் அடையாளம். இதன் மீதான தடை
கலாச்சாரத்திற்கு விரோதமாகவும், சமூகத்தின் உணர்வுகளுக்கு எதிரானதாகவும் பார்க்கப்படும். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க உரிமை உள்ளது.
இந்த விளையாட்டை விலைமதிப்பற்ற உள்நாட்டு கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஒரு கருவியாக பார்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு எவ்வித கொள்கைகளையும் மீறவில்லை.
ஜல்லிக்கட்டின் பாரம்பரியம், கலாச்சார முக்கியத்துவம் உயர்நிலைப் பள்ளி பாடப் புத்தகத்தில் கற்பிக்கப்படுகிறது. இதனால் அதன் முக்கியத்துவம் தலைமுறைகளுக்கு அப்பால் பராமரிக்கப்படுகிறது” என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று (நவம்பர் 24) உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு விசாரணை நடக்குகிறது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு விசாரணை நடைபெறுகிறது.