17-வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று(ஜூன்.17) கூடியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும்(ஜூன்.18) எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று தமிழகத்தைச்சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். தொகுதி வரிசை வாரியாக தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றனர்.
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றார். 'காந்தி, அம்பேத்கர், காமராஜர் வாழ்க' என்று கூறி அவர் பதவியேற்றார். இது போலவே வட சென்னை திமுக எம்.எல்.ஏ. கலாநிதி வீராசாமி பதவியேற்றார். தொடர்ந்து பதவியேற்ற தயாநிதி மாறன் 'பெரியார், கருணாநிதி வாழ்க' என்று கூறி பதவியேற்றார்.
விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் 'தமிழ் வெல்க' என்று கூறி பதவியேற்றார். அதேபோல் சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் 'அம்பேத்கர், பெரியார் வாழ்க, வாழ்க ஜனநாயகம் என்று கூறி பதவியேற்றுக் கொண்டார். திமுக எம்.பி.கனிமொழியும் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். அவர் 'வாழ்க தமிழ்; வாழ்க பெரியார்' என்று தனது பதவியேற்பு உரையை நிறைவு செய்தார். தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார், 'வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்' என்று பதவியேற்றுக் கொண்டார்.
ஜோதிமணி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பல தமிழக எம்.பிக்கள் பதவி ஏற்ற பின்னர் தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என கோஷம் எழுப்பினர்.
தமிழக எம்.பிக்களின் 'வாழ்க தமிழ்' முழக்கத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வேறு சில எம்.பி.க்கள் "பாரத் மாதா கி ஜே" என்று புகழ் பாடினர். ஆனால் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது, தமிழக எம்.பிக்கள் தமிழில் பேசி மக்களவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தினர்.
பாரிவேந்தர் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று 'தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க' என கிண்டலாக சொல்ல, அவையில் சிரிப்பொலி எழுந்தது.
அதேபோல், தமிழக எம்.பி.க்களின் பெயரை உச்சரிக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார் வட இந்திய பெண் அறிவிப்பாளர். திருநாவுக்கரசு பெயரை அவர் உச்சரித்த விதத்தைக் கண்டு அனைவரும் சிரித்தனர். குறிப்பாக, திமுக எம்.பி. ஞான திரவியம் பெயரை, அறிவிப்பாளர் 'கியான் திரவியம்' என்று அழைக்க, தமிழக எம்.பி.க்களே சிரித்துவிட்டனர்.
இந்நிலையில், இந்திய அளவில் #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
முன்னதாக, வயநாடு எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ராகுல் காந்தி அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் நடையைக் கட்டினார். இதனைப் பார்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கையெழுத்திட்டுச் செல்லுமாறு ராகுலுக்கு நினைவூட்ட, அதன் பின் ராகுல் காந்தி கையெழுத்திட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.