Indian National Congress G23 Leaders : காங்கிரஸ் கட்சியில் சீர்த்திருத்தம் வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் கடந்த ஆண்டு கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் ஜி 23 தலைவர்கள் என்று அழைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த குழுவில் இருந்து 4 மூத்த தலைவர்கள் சமீபத்தில் விலகியுள்ளனர். தங்களின் கடிதங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், கட்சியின் சமீபத்திய நடவடிக்கைளில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் முன்னாள் மாநிலங்களவை துணைத் தலைவர் பி ஜே குரியன். காங்கிரஸை மேம்படுத்துவதற்கும், தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கும் நான் எதிரானவன் இல்லை என்றும் “லட்சுமண ரேகை எல்லைகளை மீறக்கூடாது” என்று கூறியுள்ளார்.
மாநிலங்களவை எம்பியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சமீபத்தில் ஓய்வு பெற்ற நிலையில், அவரை பாராட்டும் விதமாக ஜம்முவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆனந்த் சர்மா, கபில் சிபல், மணீஷ் திவாரி, பூபிந்தர் சிங் ஹூடா, ராஜ் பப்பர் மற்றும் விவேக் தங்கா ஆகிய மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில், ஆசாத் போன்ற ஒரு “அனுபவம் வாய்ந்த” தலைவரை காங்கிரஸ் சரியாக பயன்படுத்தவில்லை, அவர் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறாமல் இருப்பதற்காகவும் கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மூத்த தலைவர்கள் குறை கூறினர்.
தொடர்ந்து குலாம் நபி ஆசாத் கடந்த சனிக்கிழமை பேசியபோது, “தனது உண்மையான சுயத்தை மறைக்காத ஒருவர்” பிரதமர் நரேந்திர மோடி என்று புகழாரம் சூட்டினார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆனந்த் சர்மா நேற்று முன்தினம், வங்கதேசத்தில், அப்பாஸ் சித்திகியின் இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடனான “கூட்டணி வைத்த” காங்கிரஸ் தலைமையை கண்டித்தார்.
இதனைத் தொடர்ந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் பி.ஜே. குரியன், கூறுகையில் “காங்கிரஸை வலுப்படுத்தும் அளவிற்கு தலைவர்களின் நடவடிக்கைகள் சரியாக உள்ளன. ஆனால் இது ஒரு அதிருப்தி நடவடிக்கையாக மாறக்கூடாது. நிச்சயமாக, காங்கிரசில் முன்னேற்றம் தேவை. இந்த முன்னேற்றங்களை நான் எதிர்க்கவில்லை. ஜம்மு நிகழ்வின் விவரங்கள் எனக்குத் தெரியாது. எனக்கு முழு விவரங்கள் கிடைக்கும்போதுதான் அது ஒரு அதிருப்தி நடவடிக்கையா அல்லது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியா என்று என்னால் கூற முடியும். காங்கிரஸை பலப்படுத்தி திருத்தும் முயற்சிகளுக்கு நான் எதிரானவன் அல்ல. கடசியில் சீர்திருத்தங்கள் தேவை என்று நான் நம்புகிறேன். ஆனால் எல்லைகளான லட்சுமண ரேகையை மனதில் கொள்ள வேண்டும். இது ஒரு அதிருப்தி நடவடிக்கையாக மாறக்கூடாது என்று தெரிவித்துள்ளார்..
தொடர்ந்து மக்களவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தீப் தீட்சித் கூறுகையில், கட்சியில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கடிதம் எழுதிய 23 தலைவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆசாத் மோடியைப் புகழ்ந்தார் என்று நம்பவில்லை என்று தெரிவித்த தீட்சித் இது குறித்து “அவரிடம் கேட்பது சிறந்தது என்றும், நான் அவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் சிங் கூறுகையில், “பிரதமர் மிகவும் நல்லவர் என்று சொல்வதில் எனக்கு எந்த உடன்பாடு இல்லை. நாங்கள் கையெழுத்திட்ட கடிதம் உட்கட்சி ஜனநாயகத்திற்கு உட்பட்டதாக இருந்தது. அது இன்னும் சரியானது என்று நான் கருதுகிறேன். மீதமுள்ள அனைவருக்கும் அவர்களின் சொந்த கருத்தை கூறுவதற்கு உரிமை உண்டு. சோனியா காந்தியின் தலைமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ” மற்றவர்களைப் போலவே, ஜம்மு நிகழ்வு குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான எம்.வீரப்பா மொய்லி, இந்த கடிதம் ஒரு வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காகவும், அந்தக் கடிதத்தின் பெயரில் எந்தவொரு நடவடிக்கைகளையும் நிலைத்திருப்பதற்கும், அது கட்சியை புத்துயிர் பெறுவதற்கான உண்மையான நேர்மையான நம்பிக்கையுடன் அனுப்பப்பட்டதால் அதை துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும்“ஜி 23 என்பது ஜி 20 போன்ற ஒரு நிறுவனம் அல்ல. ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும்போது, கட்சி தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க இது சரியான நேரம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.