கொரோனா மருத்துவமனையில் திடீர் தீவிபத்து : 8 நோயாளிகள் பலி

Indian Corana Hospital : கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வந்த மும்பை மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Mumbai Covid-19 Care Hospital Fire : இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், மும்பையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதில் பெரும் பகுதி பாதிப்பு மும்பையில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், மும்பையில் பாண்டப் வெஸ்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சன்ரைஸ் மருத்துவமனையில் இன்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 8 நோயாளிகள் பலியான நிலையில், 70 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மும்பை ட்ரீம்ஸ் மால் என்ற மூன்று மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ கட்டிடம் முழுவதும் பரவி 3-வது மாடியில் இருந்த  சன்ரைஸ் மருத்துவமனையில் தீப்பற்றியுள்ளது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அனைத்து நோயாளிகளும் கட்டிடத்திலிருந்து தீயணைப்பு அடைப்பு பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சன்ரைஸ் மருத்துவமனையில் இருந்து 30 கொரோனா நோயாளிகள் முலுண்ட் ஜம்போ சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும்,  இரண்டு நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) உள்ளதாகவும், மேலும் இருவர் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மற்ற நோயாளிகள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கொரோனா தொற்று அல்லாத  நோயாளிகள் ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து சன்ரைஸ் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹபீஸ் ரஹ்மான், இந்த தீவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சில நோயாளிகளைக் காணவில்லை என்றும், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விபத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு தீ விபத்துக்கு முன்னரே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து 14 தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் 10 ஜம்போ வாட்டர் டேங்கர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இது குறித்து சன்ரைஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பின்போது, மக்களின் நலன் கருதி, இந்த” மருத்துவமனை தொடங்கப்பட்டது. அப்போது இந்த மருத்துவமனை பல நோயாளிகளை கோவிட் இறப்புகளிலிருந்து காப்பாற்ற உதவியது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த மருத்துவமனை சரியான உரிமம், நர்சிங் ஹோம் லைசென்ஸ் போன்ற அனைத்து ஆவணங்களுடன் செயல்படுகிறது. சக்கர நாற்காலிகள் மற்றும் படுக்கைகளில் உள்ள நோயாளிகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தீயணைப்பு வீரர்களுடன்  மருத்துவமனை ஊழியர்கள் தீயை அணைக்க சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ள மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட  பின்னர், சம்பவத்தின் காரணத்தை அறிய விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், “இது மிகவும் கடுமையான நிலைமை. முதல் முறையாக ஒரு மாலில் ஒரு மருத்துவமனையைப் பார்த்தேன். தீ விபத்துக்கான காரணத்தை அறிய சிவிக் அமைப்பு விசாரணை நடத்தி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் ”என்று பெட்னேகர் கூறினார்.

தொடர்ந்து இந்த விபத்து குறித்து மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்ரே மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பை நகரில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில், 5,504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்  நகரத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,80,146 ஆகவும், கொரோனா தொற்று பாதிப்புக்கு 14 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி  எண்ணிக்கை 11,623 ஆகவும் உள்ளது. மேலும் அதிகரித்து வரும் பாதிப்பு, காரணமாக, பி.எம்.சி மருத்துவமனைகளில் படுக்கைகள் அடுத்த 15 நாட்களில் 13,773 லிருந்து 21,000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil national update fire at covid 19 hospital mumbai

Next Story
18 மாநிலங்களில் இரட்டை உருமாறிய கொரோனா: தேவைக்கு ஏற்ப பொது முடக்கத்திற்கு அனுமதி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com