தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தமிழை வழக்காடு மொழியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்க முடியாது என மத்திய அமைச்சர் மாநிலங்களவையில் பதில் அளித்தார்.

தமிழை வழக்காடு மொழியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவிக்க முடியாது என மத்திய அமைச்சர் மாநிலங்களவையில் பதில் அளித்தார்.

தமிழ் மொழியை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் கோரி வருகிறார்கள். உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இதற்காக பலகட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்காடு மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2006-ம் ஆண்டில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சசிகலா புஷ்பா எம்.பி இது தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் இன்று எழுப்பினார்.

இதற்கு, மத்திய சட்டத்துறை இணை மந்திரி சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை ஐகோர்ட்டில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசிடம் இருந்து 2006-ம் ஆண்டு கோரிக்கை பெறப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்த பரிந்துரையை ஏற்கமுடியாது என சுப்ரீம் கோர்ட் அனைத்து நீதிபதிகள் அமர்வு 11-10-2012 அன்று அறிவித்தது. கடந்த 1997 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் இதே போன்ற கோரிக்கை எழுந்த போது அதனை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இதனால், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் எழுந்த முக்கிய கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

 

×Close
×Close