/indian-express-tamil/media/media_files/2025/08/08/tamilnadu-dmk-2025-08-08-19-28-45.jpg)
ஜிப்மர் மருத்துவமனையில், பணம் கட்டுவோருக்கு மட்டுமே சிகிச்சை என்ற நிலை உள்ளது. இதனால் புதுச்சேரியின் உரிமை பறிபோவதை முதல்வர் ரங்கசாமி தடுக்க வேண்டும் புதுச்சேரி திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
வேலைவாய்ப்பில் புதுச்சேரி மக்களை புறக்கணிக்கும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து இன்று திமுக போராட்டம் நடத்தியது. இப்போராட்டத்துக்கு தலைமை வகித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசுகையில், புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 10 ஆயிரம் பேர் பள்ளி படிப்பிலிருந்து வெளியேறியுள்ளார்கள். இதற்கு முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் பதில் சொல்ல வில்லை. பெற்றோர் கதிகலங்கி போயுள்ளனர்.
புதுச்சேரி உரிமைகள் தற்போது கைவிட்டு போய் வருகிறது. குறிப்பாக ஜிப்மர் தன்னாட்சி பெற்று, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. ஐந்தாண்டுகளில் சி குரூப் பணியிடங்கள் ஒப்பந்தப்பணியாக்கிவிட்டனர். செவிலியர் பணியிடங்களில் தவறு தொடங்கியது. கேரள மாநிலத்தவர் முதலில் வந்தனர். தற்போது திட்டமிட்டு செவிலியர் தேர்வை ஜிப்மர் நடத்தாமல் எய்ம்ஸ் மூலம் முதல் முறையாக நடத்துகின்றனர்.
ஜிப்மர் நடத்தியபோது புதுச்சேரி, தமிழக மக்கள் மட்டும் பயனடைந்து வந்தனர். தற்போது எய்ம்ஸ் தேர்வு நடத்தினால் வடமாநிலத்தவர் அதிக அளவில் வருவார்கள். ஜிப்மர் தனி அரசாங்கம் நடத்துவதாக நினைக்கிறார்கள். இந்தியை அதிகளவில் பேசினால் சிறப்பு சலுகை தருவதாக ஜிப்மரில் இந்தி செல் தொடங்கி சீண்டி பார்த்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் தங்களுக்கு வேண்டிய வடமாநிலத்தவரை இங்கு கொண்டு வரும் மோசடி நடக்கிறது. ஜிப்மர் உரிமையும் பறிபோகிறது. ஒன்றியத்தில் இருப்போர் ருசி கண்டுவிட்டால் இது தொடர்ந்து ஜிப்மர் நமக்கு இல்லாத நிலை ஏற்படும்.
புதுச்சேரி பட்ஜெட்டில் கால்வாசி ஜிப்மர், மத்திய பல்கலைக்கழகத்துக்கு வருகிறது. சிகிச்சைக்கு வருவோரிடம் வெளியே மருந்து வாங்கி வரசொல்கிறீர்கள். புதுச்சேரி அரசு காப்பீடு செல்லாது என்கிறீர்கள். மோசமாக ஏழைகளுக்கு இல்லாத நிர்வாகமாகி உள்ளது.பணம் கட்டுவோருக்கு மட்டுமே சிகிச்சை என்ற நிலை உள்ளது. புதுச்சேரி அரசு, இது நம் மாநில உரிமை என நினைப்பதில்லை. விட்டு கொடுக்கிறார்கள். அரசு இதில் தலையிட வேண்டும். விரிவுரையாளர் தொடங்கி பல ஆயிரம் பணியிடங்கள் தேவை. தற்போது 500 பணியிடங்கள் எய்ம்ஸ் மூலம் செய்யவுள்ளது தவறானது. நீங்கள் தேவையெனில் டெல்லி நீதிமன்றத்தை நாடசொல்கிறீர்கள்.
தேர்வுக் கட்டணம் ரூ. 3500 கட்ட சொல்கிறீர்கள். புதுச்சேரியை சேர்ந்தோருக்கு எந்த தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்பதும் தெரியாது. ஏழைகள் வேலைக்கு போவதையும், புதுச்சேரியை சேர்ந்தோருக்கு கிடைக்கக்கூடாது என்று ஒன்றிய அமைச்சரும், ஜிப்மர் அதிகாரியும் கூட்டு சதி செய்கின்றனர். ஜிப்மர் உரிமை கேட்கும் போராட்டமாக நடத்துகிறோம். ஜிப்மர் உரிமையை இழந்தால் எதிர்காலத்தில் புதுச்சேரியைச் சேர்ந்தவர் யாரும் இல்லாத நிலை ஏற்படும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிப்மரில் இந்தியை திணித்தார்கள். அதை எதிர்த்தோம். அப்போதைய ஆளுநர் தமிழிசை இனி வராது என உறுதி தந்தார். ஜிப்மரில் இந்தி மொழிக்கு அதிக சேவை செய்தால் சலுகை தருவதாக ஜிப்மரில் இந்தி செல் தொடங்கி சீண்டிபார்த்துள்ளனர். தற்போது 454 செவிலியர் தேர்வை ஜிப்மரில் நடத்தாமல் எய்ம்ஸ் மூலம் தேர்வு நடத்துகின்றனர். ஒன்றிய அமைச்சரும், ஜிப்மர் இயக்குநரும் நண்பர்கள். ஜிப்மரில் உறுதிமொழி மறுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு கொண்டு சென்றுதான் எய்ம்ஸ் மூலம் தேர்வு நடத்த மாற்ற வேண்டும். அதேபோல் செய்யவில்லை. பணம் கட்டி தான் சிகிச்சை என்ற நிலை மாறிவிட்டது. ஏழைகளுக்கு உகந்ததாக இல்லை. சி குரூப் முற்றிலும் மறுக்கப்பட்டு ஒப்பந்த பணியில் தான் 3800 பேர் தான் உள்ளனர். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மாற்று ஆள் இல்லை. மருத்துவமனைக்கு முன்பாக என்பதால் அடையாள போராட்டமாக நடத்தியுள்ளோம். தொடர்ந்து புதுச்சேரி உரிமை மீட்பு போராட்டம் நடத்துவோம்.
மாநில அரசு புதுச்சேரி மக்களின் உரிமை பறிபோவதை கவலைப்படவில்லை. முதல்வர் இவ்விஷயத்தில் குரல் கொடுக்கவில்லை. தேர்வு நடந்தால் புதுச்சேரி அரசுக்கு இழுக்கு. ஒன்றிய அரசு நிறுவனங்கள் நிறைய உள்ளது. ஜிப்மர் தன்னிச்சையாக முடிவு எடுத்து எய்ம்ஸ் மூலம் தேர்வு நடத்துவதை மக்கள் நல்வழி அமைச்சரான ரங்கசாமியும், ஆளுநரும் தடுக்க வேண்டும் என்றார்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.