சரவணக்குமார்
கேசவ ஐயங்கார், கிருஷ்ண ஐயர், குப்புசாமி, சுந்தரமூர்த்தி அகிய தமிழர்கள் அமர்ந்த பெங்களூரு மேயர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் சம்பத் ராஜ். வேலூரை பூர்வீகமாகக் கொண்டவர். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு தமிழர் ஒருவர் உச்ச பதவியில் அமர்வது என்பது கர்நாடகாவை பொறுத்தவரை அரிய நிகழ்வு. இது குறித்து அவருடைய கருத்தை கேட்க தொடர்பு கொண்டோம். எவ்வித அலங்கார வார்த்தைகள் இல்லாமல் அடக்கமாகவும், சுருக்கமாகவும் பேசுகிறார்.
“முப்பது வருஷமாக காங்கிரஸ் கட்சியில் இருக்கேன். தமிழர் ஒருத்தருக்கு இந்த பதவியை கொடுக்க கூடாதுன்னு பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன். என்னை ஒரு தமிழராக பார்க்காமல், நான் நல்ல விதமாக மக்களுக்கு சேவை செய்வேன்னு நம்பிக்கை வச்சு இந்த வாய்ப்பை கொடுத்திருக்காங்க. இதற்காக முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் எனக்கு ஆதரவாக இருந்தாங்க.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரு தான். கர்நாடக மக்கள் என்னை ஒரு தமிழராக பார்க்கவில்லை. இங்கே உள்ள கர்நாடக அரசியல் அமைப்புகளில் இருக்கும் அத்தனை பேரும் எனக்கு நண்பர்களே. அனைவரும் என்னை முழுவதும் ஆதரிக்கிறாங்க.
ஏதேனும் கலவரம் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது தமிழர்கள் தான் என்று சொல்வது முற்றிலும் பொய். அவுங்க ரொம்ப நல்ல விதமாகவும், அமைதியாகவும் தங்கள் வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்காங்க.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமுடியாத சூழ்நிலை இங்கே நிலவுது. காரணம் கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என்பதே உண்மை” என்று முடித்துக் கொண்டவரிடம் ‘பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்வியை முன்வைத்தோம்,
“யாருக்கும் சிறப்பு சலுகைகள் கொடுக்கக்கூடாது, சட்டப்படி என்ன செய்யணுமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்” கறார் தொனியில் சொல்கிறார் சம்பத் ராஜ்.