மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில், மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று அண்ணா சாலை ரெசிடன்சி டவர் மாநாட்டு அரங்கில் நடந்தது.
மத்திய மந்திரி கிஷன்ரெட்டி புனரமைக்கப்பட்ட ஆயி மண்டபம், சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உருவாக்கப்பட்டுள்ள வசதிகள், படித்துறை, காரைக்கால் திருநள்ளாறு ஆன்மிக பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்து, வணிக திருவிழாவின் விளம்பர லோகோவை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது: மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் 100 சதவீத நிதியில் புதுவையில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்திற்கும் புதுவை, காரைக்கால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதிலும் மத்திய அரசு ரூ.100 கோடி நிதி வழங்க உள்ளது. ஆன்மிக சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதி அளிக்கப்படும். முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, சில குறைபாடுகளை தெரிவித்தார். அதைநேர்மறையாக எடுத்துக்கொண்டு குறைகளை தீர்ப்போம். புதுவை அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது: முதலமைச்சர் சுற்றுலாவை மேம்படுத்த சிரமம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் முன்னிலையில் சிரமங்கள் உள்ளதை வெளிப்படையாக சுட்டிக்காட்டும் அளவுக்கு முதலமைச்சர் சுதந்திரமாக செயல்படுகிறார். எல்லோரும் இணைந்து சிறப்பாக பணியாற்றுகிறோம். புதுவை மக்கள் விரும்பும் சுற்றுலா மையமாக திகழ்கிறது. புதுவையில் புத்தாண்டு கொண்டாட விரும்புகின்றனர். புதுவையில் புதுமை ஆட்சி நடக்கிறது. கொரோனா காலத்தில்கூட புதுவையில் கட்டுப்பாடுகளுடன் நிகழ்வுகள் நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டமும் பாதிப்பின்றி நடந்தது. பிரதமர் கூறியதுபோல பெஸ்ட் புதுவையை முன்னெடுத்துச்செல்ல என் பணி அமையும். ஆட்சிக்கு துணை செய்யும் ஆளுநர் நான், அடக்கு முறை செய்யும் ஆளுநர் கிடையவே கிடையாது. துணையாக நிற்கும் ஆளுநர்தான். நிலம் ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிகாரிகளை நேரில் அனுப்பி குறைகளை கேட்டறிந்து வருகிறார். இது புதுமையான செயல்பாடு. 3 மாதம் ஒரு முறை அதிகாரிகள் குறைகளை தெரிந்துஅவற்றை சரிசெய்கின்றனர். நீண்டநாட்களாக கிடப்பில் போடப்பட்ட அதிகார பகிர்வுகள் சரிசெய்யயப்பட்டுள்ளது. புதுவையில் நல்லதொரு ஆட்சி நடக்கிறது. அதற்கு நான் துணை நிற்பேன். புதுவைக்கு நல்ல பல திட்டங்கள் வரவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், சந்திரபிரியங்கா, எம்எல்ஏக்கள் நேரு, அங்காளன், கேஎஸ்பி.ரமேஷ், ஏகேடி.ஆறுமுகம், பாஸ்கர், சம்பத், சிவசங்கர், ராமலிங்கம், பாஜக மாநில தலைவர் சாமிநாதன், தலைமை செயலர் பொறுப்பு ராஜூ, கலெக்டர் வல்லவன், சுற்றுலாத்துறை செயலர் அருண், காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குனர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”