புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைத்து விட்டது. வாய் மொழியாக தெரிவித்திருக்கிறார்கள். அதனால் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை ஏதும் ஏற்படாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்
Advertisment
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் நீரிழிவியல் துறையை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (13.06.2023) தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர், சர்க்கரைநோய் சிகிச்சைக்கென்று தனிப் பிரிவு இருக்க வேண்டும். ஏற்கனவே பொதுப்பிரிவில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நோயாளிகள் அதிகம் வருகிறார்கள். அவர்கள் அதிக நேரம் காத்துக் கொண்டிருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் புதிய துறை தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.
தற்போது இட வசதி குறைவாக இருப்பதால் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இங்கு உணவு, நரம்பு பாதிப்பு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. உடனடியாக ரத்த பரிசோதனை செய்கிறார்கள். இது தொடக்க நிலையில் சிறப்பாக தொடங்கப்பட்டிருக்கிறது. இன்னும் விரிவுபடுத்தப்படும். நேற்று சுகாதாரத் துறையுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது. மருத்துவமனையில் குறைபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு வருகிறது. நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதில்லை. எதிர்பார்ப்பதை விட அதிக கூட்டம் வந்து விடுகிறது. இருக்கின்ற படுக்கை அளவைவிட அதிகமாக வரும் போது அவர்களுக்கு படுக்கைகள் தர இயலவில்லை.
இன்று பிற்பகல் சுகாதாரத் துறையுடன் கூட்டம் நடைபெற இருக்கிறது. மக்களுக்கு என்னென்ன கருவிகள் வாங்க வேண்டும். அதனுடன் சிறப்பு மருத்துவமனையாக எப்படி மாற்ற வேண்டும் என்பது பற்றி ஆலோசனை செய்ய இருக்கிறோம். சிகிச்சைப் பிரிவுகள் அதிகம் தொடங்கப்பட வேண்டும்.
மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு தொடர்பாக தேசிய மருத்துவக் குழுவை இன்று தொடர்பு கொண்டிருக்கிறேன். புதிய கலந்தாய்வு குறித்து எந்த முயற்சியை மத்திய அரசு எடுத்தாலும் அது மாநில அரசுகளை பாதிக்காத வகையில்தான எடுக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உரிமைகளும் பறிக்கப்படாது என்பதில் சந்தேகம் இல்லை.
பொலிவுறு நகரத் திட்டப் பணிகளைப் பொருத்தவரையில் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறுகிறது. சென்ற ஆட்சியில் பணிகள் மிகவும் தாமதப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்னாலேயே முடிந்திருக்க வேண்டும். அதிகம் காலதாமதப்படுத்தப்பட்டு, தற்போது எங்களுடைய முயற்சியால் கால அளவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் சென்ற ஆட்சியில் சுணக்கமாக இருந்தது, இப்போது விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது.
பொலிவுறு நகரத் திட்டத்தில் எந்த வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிறதோ அவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரைத்திருக்கிறோம். காலதாமதம் ஆகக்கூடாது என்றும் எங்கும் ஊழல் நடைபெறக்கூடாது என்றும் வலியுறுத்தி இருக்கிறோம். இதுவரை வெளிப்படையாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊழல் இருந்தால் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.
அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைத்து விட்டது. வாய் மொழியாக தெரிவித்திருக்கிறார்கள். சிறுசிறு குறைபாடுகளை அதிகாரிகள் சரி செய்து விட்டார்கள். உடனடியாக மாணவர்களை அனுமதிக்கலாம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து சேரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil