Tamilisai Soundararajan | Puducherry | புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமி ஆர்த்தியின் உடலுக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்த செய்தியைக் கேட்டதில் இருந்து நிலைகுலைந்து போய் இருக்கிறேன். இங்கு இருக்கும் பெண்களின் மனநிலைதான் ஒரு தாயாக எனக்கும் இருக்கிறது.
அதனால்தான் சில காவல் பாதுகாப்பு சிக்கல்கள் இருந்தாலும் அவர்களுடன் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்கு நான் இங்கு வந்து சேர்ந்தேன்.
இதனை மக்கள் உணர்வாகத்தான் நான் பார்க்கிறேன். நீங்கள் எங்கள் பக்கத்தில் நிற்பது மிகப்பெரிய ஆறுதல் என்று குழந்தையின் அம்மா என்னிடம் கூறினார்.
குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். விரைவு சிறப்பு நீதிமன்றம் உடனடியாக அமைத்து ஒரு வாரத்திற்குள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நான் உடன்படுகிறேன். சில நேரங்களில் சட்டங்களை நாம் கையில் எடுக்க முடியாவிட்டாலும் உணர்வு ரீதியாக அவர்கள் பக்கம் நான் இருக்கிறேன்.
போராட்டம் செய்யும் மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அதைப்போல இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
ஏற்கனவே இங்கே போதைப்பொருள் பயன்பாடு புழக்கம் இருக்கக்கூடாது என்பதற்காக தீவிர பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் போதைப் பொருளை பழக்கத்தில் வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு துணைபுரிந்து கொண்டிருப்பவர்கள் சிலர் புதுச்சேரியில் இருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மக்கள் உணர்வுகளோடு நான் உறுதுணையாக இருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, புதுச்சேரியின் எல்லைகள் கண்காணிக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நிச்சயமாக புதுச்சேரியின் எல்லைகளை கண்காணிக்கப்படும். ஏற்கனவே ரயில் பயணத்தில் சிலர் பிடிபட்டார்கள்.
குழந்தையின் அம்மாவிற்கு ஆறுதல் சொல்ல முடிந்தது எனக்கு ஒரு ஆறுதலைத் தருகிறது. இந்த குற்றத்திற்கு ஆளானவர்கள் நிச்சயம் எந்த வகையிலும் தப்பிக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“