மன அழுத்தத்தால் ஒரு வருடத்திற்கு 300 மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை எளிதாக கடந்து விட முடியாது. மருத்துவ மாணவர்கள் சில நேரங்களில் 36 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்கிறார்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் நடைபெற்ற தேசிய மருத்துவர் தின நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இதையும் படியுங்கள்: புதுச்சேரி விவசாயிகளுக்கு குட் நியூஸ்: பயிர் காப்பீடு திட்ட முகாம் அறிவிப்பு
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறைச் செயலர் உதயக்குமார், இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு, துணை இயக்குநர் டாக்டர். ஆனந்தலட்சுமி, மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, மருத்துவர்கள் தினத்தை ஒட்டி நல்லதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் சுகாதாரத்துறை செயலர், இயக்குனர், அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பெண்கள் அதிகமாக சிரமப்படுகிறார்கள் என்று இந்தியாவிலே முதல் முறையாக இரண்டு மணி நேரம் பெண்களுக்கு சலுகை கொடுத்தது புதுச்சேரி அரசு.
மருத்துவர்களாக இருப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. மருத்துவர்களைப் பொறுத்தமட்டில் அந்த எண்ணம் எனக்கு உண்டு. அண்மையில் தெலுங்கானாவில் மயக்க மருந்தியல்துறையைச் சார்ந்த ஒரு பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார. எம்.பி.பி.எஸ் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தானாக முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அவர் தன் பெண் தோழியிடம் சொன்னது, சில நேரங்களில் எனக்கு இயற்கை உபாதைகளை கழிக்கச் செல்லக்கூட நேரமில்லை. நான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது மறுபடியும் ஒரு அறுவை சிகிச்சை பணி வந்து, மூன்று அல்லது நான்கு மணி நேரம் நிற்க வேண்டி வந்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கூட ஓய்வெடுக்க முடியவில்லை.
உயர் கல்வி படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிக்கும்போது எவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை மருத்துவராக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அண்மையில் துணை வேந்தர்களின் மாநாட்டில் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை அழைத்து, உயர்கல்வி பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர முடியுமோ செய்து தாருங்கள். மற்றவர்களின் நோய்களை சரி செய்யும் அவர்கள் நோயாளிகளாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தேன்.
மன அழுத்தத்தால் ஒரு வருடத்திற்கு 300 மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை எளிதாக கடந்து விட முடியாது. மருத்துவ மாணவர்கள் சில நேரங்களில் 36 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்கிறார்கள். மருத்துவத் துறையில் உயர் கல்வி மாணவர்கள், பணி செய்யும் மருத்துவர்கள், சிறப்பு நிபுணர்கள் எத்தகைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவர்களுடைய பிரச்சினைகளை சரி செய்ய வேண்டியது மருத்துவத் துறை அதிகாரிகளின் பொறுப்பு என்பதை இந்த மருத்துவர் தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்கள் சம்பாதிக்கிறார்கள் என்ற தோற்றம்தான் வெளியே தெரிகிறதே தவிர மருத்துவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் மருத்துவர்களுக்கு தான் தெரியும். மருத்துவராக இருப்பதால் அரசு மருத்துவமனைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் பணிபுரிந்த போது சாமானிய மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
அரசு மருத்துவமனைக்கு தைரியமாக நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று தைரியமாக செல்லும் போது தான் அது சாதனை. அதுதான் வளர்ச்சி அடைந்த ஒரு மாநிலத்திற்கு அடையாளமாக இருக்க முடியும். அதனால்தான் புதுச்சேரி வேகமாக முன்னேற வேண்டும் என்று தெரிவிக்கிறேன்.
அண்மையில் பள்ளிக் குழந்தைகள் அடிபட்ட போது அரசு மருத்துவமனையில் நல்ல சிறப்பு மருத்துவ குழு இருக்கிறது என்று பெற்றோர்களுக்கு நம்பிக்கை தெரிவித்த பிறகு சிகிச்சை அளித்து குழந்தைகள் காப்பாற்றப்பட்டது. நான் 100% மருத்துவர்களை நம்பினேன். அது நடைபெற்றது. மருத்துவர்கள் கொரோனா காலத்தில் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
எத்தனையோ சிரமங்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளை கவனிக்க முடியாது. கொண்டாட்டங்களில் பங்கு கொள்ள முடியாது. மருத்துவர்களின் திறமை கணக்கிட முடியாதது. அளவிட முடியாதது. உண்மையிலேயே தியாகிகள் என்றால் அது மருத்துவர்கள் தான். மற்றவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு கோவப்படாமல் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவதியில் இருந்தாலும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
நோயாளிகளுக்கு ஏதாவது நடந்து விட்டால் மருத்துவர்களை தாக்க ஆரம்பித்து விடுகிறார்கள். வருகிற நோயாளிகள் உயிரிழக்க வேண்டும் என்று மருத்துவர்கள் நினைப்பதில்லை. நோயாளிகள் இறந்தால் மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு மக்களின் மனநிலை மாறிக்கொண்டிருக்கிறது. சில மருத்துவர்கள் செய்கின்ற தவறுகளால் எல்லா மருத்துவர்கள் மீதும் குற்றச்சாட்டு விழுந்து விடுகிறது.
மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும். மருத்துவர் அங்கியை அணிய வேண்டும். பெயர் பட்டையை அணிந்து கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனையை பார்க்கும்போது வரும் நம்பிக்கையை, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நாம் அளிக்க வேண்டும். அது நமது கடமை, உரிமை. அதை மருத்துவர்கள் செய்ய வேண்டும். மருத்துவர்களுக்கு சீருடை கொண்டு வர முடியுமா என்று கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையை இங்கே தொடங்க வேண்டும். சிறந்த சிறுநீரக மாற்று மருத்துவமனையாக இது மாற வேண்டும். உயர் சிகிச்சைகள் அனைத்தும் பொது மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பது எனது கோரிக்கை. மருத்துவர்கள் மகிழ்ச்சியோடு இருங்கள். மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நோயாளிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மக்களை காப்பாற்ற முடியும். தகுதியான மருத்துவர்களுக்கு, சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற நோயாளிகளை உயிரை நம் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவோம் என்று உறுதியாக பணியாற்றுவோம். இவ்வாறு தமிழிசை உரையாற்றினார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர், மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தனது நேரத்தையும் சக்தியையும் பொழுதுபோக்கையும் மகிழ்ச்சியையும் தியாகம் செய்துவிட்டு நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்றுகிறார்கள். கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உதவும் பொழுது பல மருத்துவர்கள் தங்களது உயிரையும் இழந்திருக்கிறார்கள். அதனால் இந்த நாளை அவர்களுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவத்துறை எல்லா வகையிலும் முன்னேற வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தனியார் மருத்துவமனைகளில் மட்டும் பெரும்பாலும் செய்யப்பட்டு வந்த சிகிச்சை முறைகள் இன்று அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளை விடவும் மிகச் சிறப்பான முறையில் சிகிச்சைகள் செய்ய முடியும் என்பதை புதுச்சேரி மருத்துவத்துறை நிரூபித்து கொண்டு வருகிறது.
புதுச்சேரியில் இன்னும் பல முன்னேற்றங்கள் மருத்துவத்துறையில் வர இருக்கிறது. மாண்புமிகு பாரதப் பிரதமரின் 'டயாலிசிஸ் திட்டம்' மிக வெற்றிகரமாக குஜராத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த சிகிச்சை முறை புதுச்சேரியிலும் நிகழவிருக்கிறது. அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
அதே மாதிரி அனைத்து மருத்துவமனைகளிலும் அதிநவீன 10 இருக்கைகள் கொண்ட ஐ.சி.யூ வரவிருக்கிறது. மேலும், ‘காசநோய் இல்லாத புதுச்சேரியை’ படைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண் பார்வை இல்லாத நிலை வரக்கூடாது என்பதற்காக புதுச்சேரியில் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்படவிருக்கிறது.
சுகாதரத்துறையானது சமீபத்தில் மருத்துவத் திருவிழா ஒன்றை நடத்தியது. அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அதே போன்று, கிராமங்களிலும் அந்த மருத்துவத் திருவிழா நடைபெற இருக்கிறது. ஆக எல்லா வகையிலும் மக்கள் நலன் பெரும் வகையில் சுகாதாரத்துறை செயலாற்றி வருகிறது.
மேலும், இன்று மருத்துவ தினம் மட்டுமல்லாது, ஜி.எஸ்,டி தினமும் கொண்டாடப்படுகிறது. ஜி.எஸ்.டியால் மட்டுமே விலைவாசி உயர்ந்து விட்டதாக செய்திகள் மக்களிடையே பரவுகிறது. ஆனால் பல வரிகள் இணைத்து ஜி.எஸ்.டி யாக மாறுவதால், பல குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதனை மத்திய அரசு நேற்று வெளியிட்டிருக்கிறது. இதை நான் சொல்வதற்கான காரணம் இதன் மூலம் மக்களும் அரசும் பலனடைந்திருக்கிறார்கள். அதனால் நாம் மக்களுக்கு நல்லதைக் கொண்டு சேர்ப்போம். இவ்வாறு தமிழிசை கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.