தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை செளந்தரராஜன், இந்தியாவின் இளம் வயது கவர்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செப்டம்பர் 1ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த கவர்னர்களில் சராசரி வயது 73 என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிசை செளந்தரராஜன் (வயது 58), கடந்த 8ம் தேதி தெலுங்கானா மாநில கவர்னராக பதவியேற்றார். தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையை, தமிழிசை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது, இந்தியாவின் இளம் வயது கவர்னர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
குஜராத் கவர்னராக இருந்த ஆச்சார்யா தேவ்ராத் (வயது 60) நாட்டின் குறைந்த வயது கவர்னர் என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில், தமிழிசை, தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
29 ராஜ்பவன்களை அலங்கரித்து வரும் 28 கவர்னர்களில் ஒருவர் மட்டுமே 60 வயதிற்கு உட்பட்டவர். 7 பேர் 60 முதல் 70 வயதிலும், 14 பேர் 70 வயதிற்கும் மேற்பட்டவர்களாகவும், 6 பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தின் 23வது கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிசந்தன் (வயது 85), இந்தியாவின் அதிக வயது கவர்னர் என்ற பெருமை பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து மத்தியபிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன் ( வயது 84), இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.28 கவர்னர்களில், 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.