ஏபிபி நெட்வொர்க் சார்பில் தென்னிந்திய எழுச்சி மாநாடு 2023 (தி சதர்ன் ரைசிங் சம்மிட்) தாஜ் கோரமண்டல் ஓட்டலில் இன்று(12-10-2023) நடைபெற்றது.
இதில், துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசுகையில், “எத்தகைய பதவியில் இருந்தாலும் அது மக்களுக்காக தான். இப்பொழுது வரை புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவில் சிறப்பாக மக்கள் பணி செய்து வருகிறேன்.
நான் கற்ற கல்வி, வளர்த்துக் கொண்ட தகுதி, அரசியல் அனுபவம் போன்றவை எனக்கு இரு மாநிலங்களிலும் திருப்தியாக பணி செய்யும் உணர்வை தருகிறது. மக்களோடு தொடர்பு கொள்ளும் பாலமாக இணைப்பாக செயலாற்றி வருகிறேன்.
இன்று வரை ஆளுநருக்கு முதலமைச்சருக்கும் நல்ல உறவு முறையானது புதுச்சேரியில் தொடர்ந்து வருகிறது. ஆனால் தெலுங்கானாவில் அது நிகழவில்லை என்பது வருத்தமான ஒன்று.
தெலங்கானா பெண்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் போது ‘மகிளா தர்பார்’ என்கிற முன்னெடுப்பின் மூலம் நட்பு முறையில் அவர்களை அணுக முயற்சித்தபோது தெலங்கானா அரசு அதை அரசியல் ரீதியிலாக பார்த்தது.
கொரோனா காலத்தில் பழங்குடியின மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டிக் கொண்டிருந்த பொழுது அவர்களின் தயக்கத்தினை போக்குவதற்காக அவர்கள் மத்தியில் அவர்களோடு கொரோனா தடுப்பு ஊசியை நான் செலுத்திக் கொண்டேன்.
அதன் மூலம் அவர்கள் தயக்கம் விலகி அனைவரும் ஒவ்வொருவராக வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள்.
இதுரையில் ஆறு பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களை நான் தத்தெடுத்திருக்கிறேன். ‘நல்லமல்லா’ காடுகளில் பழங்குடி இன மக்களை சந்திப்பதற்காக கிட்டதட்ட 15 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறேன்.
அங்கே அவர்களுக்கு ஏற்பட்ட அனிமியா சிக்கல்களுக்கு உதவும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுபோல பல முன்னெடுப்புகள் நான் செய்திருக்கிறேன்.
அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் ஆளுநர் மூலமாக செய்யப்படும் எந்த செயல்களையும் நடுநிலையான பார்வையில் பார்க்க வேண்டும். அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம்” என்றார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“