புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (14-09-2023) புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைப் பிரிவைப் பார்வையிட்டார்.
புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு நிலவரம் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் துணைநிலை ஆளுநர் கேட்டறிந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர், ‘டெங்கு’ தொற்றால் அனுமதிக்கப்பட்ட ஏழு ஆண்களில் இரண்டு பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு டெங்கு இல்லை. தொற்று அறிகுறிகளோடு வருபவர்களுக்கு இங்கு 'எலிசா சோதனை' செய்யப்படுகிறது.
இதன் மூலம் நோய் இருப்பது கண்டறியப்படுகிறது.
*டெங்கு நோயினால் இரண்டு பேர் தனியார் மருத்துவமனையில் இறந்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
மக்கள் தங்களை சோதனை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். டெங்கு மிகவும் பயங்கரமான ஒரு நோய். இருந்தாலும் இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
*டெங்கு கொசுவைப் பற்றி பெரும்பாலான மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. டெங்கு கொசுவானது நல்ல தண்ணீரிலும் குளிர்சாதனங்களிலும் வீட்டு உபயோகப் பொருட்களிலும் இயல்பாக வளரக்கூடியது.
*மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நோய் தடுப்பிற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது.
*நேற்று செவிலியர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு கொரோனா நேரத்தில் பணியாற்றிய ஊழியர்களை நிரந்தரம் செய்வதற்கான பணியும் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனையில் நோயினை குணப்படுத்த சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
*மாகே பகுதியில் இந்த நோய் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு நோய்த்தொற்று இருக்கும் பட்சத்தில் சோதனை எடுக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“