புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை தலைமையில் ரயில்வே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
சென்னை - மகாபலிபுரம் - கடலூர் வழித்தடத்திலான ரயில் சேவை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இன்று நடந்த புதுச்சேரி கவர்னர் மற்றும் சென்னை தெற்கு ரயில்வே நிர்வாக அதிகாரி உடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisment
சென்னை தெற்கு ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) வி.கே. குப்தா தலைமையிலான அதிகாரிகள் குழு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை இன்று (06-06-2023) துணைநிலை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசியது.
இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி ரயில் நிலையம் மற்றும் புதுச்சேரிக்கான ரயில் சேவையை மேம்படுத்துவது, புதுச்சேரி ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற சுடுகளிமண் சிற்ப அரங்கு அமைப்பது, புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கு ரயில் சேவையை தொடங்குவது மற்றும் வில்லியனூர் ரயில் நிலையத்தை முக்கிய நிறுத்தமாக மேம்படுத்துவது, மேலும் முக்கியமாக சென்னை- மகாபலிபுரம்- கடலூர் வழித்தடத்திலான ரயில் சேவைத் திட்டத்தை விரைவுபடுத்துவது ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
ரயில் சேவை மேம்பாட்டுப் பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை துணைநிலை ஆளுநர் கேட்டுக் கொண்டார். தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, போக்குவரத்து மற்றும் திட்டத்துறைச் செயலர் முத்தம்மா, துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, மாவட்ட ஆட்சியர் வல்லவன், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் ஆகியோர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.
இந்தநிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஆா்.சி.டி.சி பொது மேலாளா் ரவிக்குமார், இந்தியன் ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவானது (ஐ.ஆா்.சி.டி.சி) சுற்றுலாப் பயணிகளுக்காக பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ரயிலில் 3 குளிர்சாதனப் பெட்டிகள், 8 தூங்கும் வசதியுடைய பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார் பெட்டிகள், 2 பவா் கார் பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் சுற்றுலா, மொத்தம் 11 நாள்கள் நடைபெறவுள்ளன. அதில், 12 இரவுகள் உள்ளடங்கியுள்ளன. ஹைதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவதேவி (கட்ரா), அமிர்தசரஸ், புதுதில்லி ஆகிய நகரங்களையும் சுற்றுலா தலங்களையும் காணலாம். ரயிலின் மூன்றடுக்கு ஏ.சி பிரிவில் 208 படுக்கைகளும், தூங்கும் வசதி பிரிவில் 560 படுக்கைகளும் உள்ளன. தூங்கும் வசதி பிரிவில் ஒருவருக்கு ரூ. 22,350 கட்டணமும், ஏ.சி பிரிவுக்கு ரூ. 40,380 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயில் நாகா்கோவில், திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் வழியாகச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தவா் விழுப்புரத்தில் இருந்து இதில் இணையலாம் என்று கூறினார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil