தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது மத்திய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு ஒன்று வழங்கினார். அந்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வார்டுகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் பணியையும் அரசு மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுகுறித்து ஏற்கனவே மத்திய நிதித்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதமும் முதல் தவணைத் தொகை அளிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள அமைச்சர் வேலுமணி, தற்போது மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 2017 - 18 ஆம் ஆண்டுக்கான 2ம் கட்ட தவணைத் தொகையையும், 2018 - 19ம் ஆண்டுக்கான முதற்கட்ட தவணைத் தொகையையும் சேர்த்து 3 ஆயிரத்து 558 கோடியே 21 லட்சம் ரூபாய் உள்பட மத்திய அரசிடம் இருந்து தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் 5 ஆயிரத்து 387 கோடியே 99 லட்சம் ரூபாயை உடனே அனுமதிக்கவேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.