தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று பிரதமர் மோடியை சந்தித்து விளக்கம் அளித்தார்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்ட மேகங்கள் சூழ்ந்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. ஆங்காங்கே, சில இடங்களில் வன்முறைகளும் அரங்கேறி வருகிறது.
இவ்வாறு தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி ஆகியோருடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவசரமாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர் புரோஹித், பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விளக்கமாக கூறியுள்ளார். மேலும், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசியுள்ளார். வரும் 15-ம் தேதி சென்னை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முடிவு செய்திருப்பதால், அது தொடர்பாகவும் ஆளுநர் விவரித்துள்ளார்.