மக்களவையில், ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவருமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:
நாட்டில் தற்போது உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் இவற்றின் செயல்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி மாநில வாரியாக எவ்வளவு? குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? தமிழ்நாட்டில் செயல்படும் பி.எம்.ஸ்ரீ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள தமிழ், இந்தி, மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை என்ன? தமிழுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் சமநிலை உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.
தயாநிதி மாறனின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் அளித்த பதில்கள்:
தமிழ்நாட்டில் உள்ள 34 பி.எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 69 இந்தி ஆசிரியர்கள், 50 சமஸ்கிருத ஆசிரியர்கள் உள்ளனர். தமிழ் ஆசிரியர்கள் 34 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் மொழி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 24 பள்ளிகளில் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தமிழ்ப் பாடம் கற்பிக்கப்படுகிறது. மீதமுள்ள 21 பள்ளிகளில் தமிழ்ப் பாடங்கள் தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்பான தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் கற்பிக்கப்படுகிறது
மாநிலத்திற்கான பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கு நிதியை வழங்குவது குறித்த கேள்விக்கு, பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இன்னும் இணையவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.