ஜிஎஸ்டியால் மாநிலங்கள் தன்னாட்சி அதிகாரத்தை இழந்து வருகிறது: நிதியமைச்சர்

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் மாநிலங்கள் தன்னாட்சி அதிகாரத்தை இழக்கும் என்ற அச்சம் உண்மையாகிவிட்டதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

GST, palanivel thiagarajan

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு(எஃப்ஐசிசிஐ) சார்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தென்னிந்திய ஜிஎஸ்டி மாநாடு என்ற தலைப்பிலான இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் உள்ளிட்ட பல மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “நாட்டில் சுமார் 40 கோடி மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஜிஎஸ்டி நடைமுறை, எந்த அளவிற்கு நிலையற்றதாக உள்ளது என்பது என்னைப் போன்று 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர்களுக்கே விரைவாக புரிகிறது. ஜிஎஸ்டியால் மாநிலங்கள் தன்னாட்சி அதிகாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக செஸ் என்ற பெயரில் மறைமுக வரி வசூலைச் செய்யும் மத்திய அரசு அதனை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை. மேலும் அண்மை காலமாக மொத்த வரி விதிப்பில் செஸ் விகிதம் 110 சதவீதத்திலிருந்து 124 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில், வரி விதிப்பு நடைமுறையில் மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்தை இழந்து வருகின்றன” என்றார்.

கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறுகையில், “ஜிஎஸ்டி நடைமுறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக கேரள மாநிலத்தின் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் 14 முதல் 16 சதவீதம் அளவில் இருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, முதல் 2 ஆண்டுகளுக்கு மாநில வருவாயில் தேக்க நிலை நீடித்ததோடு, தற்போது கொரோனா பாதிப்பும் சேர்ந்ததால் எதிர்மறை வளர்ச்சி விகிதத்தில் மாநிலம் சென்று கொண்டிருக்கிறது. எனவே ஜிஎஸ்டி நடைமுறை கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. ஜிஎஸ்டி காரணமாக மாநில அரசுகள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஜூலை 2022 முதல் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காது” என்றார். மாநிலங்கள் மீதான மத்திய அரசின் கொள்கை மற்றும் அணுகுமுறைதான் பிரச்சனையாக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், வலுவான பொருளாதாரத்திற்கு வணிகங்களும் அரசும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கர்நாடக தொழில்துறை அமைச்சர் முர்கேஷ் நிரானி கூறுகையில், தீர்க்கப்பட வேண்டிய சில சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்தாலும், வரி கட்டமைப்பில் ஜிஎஸ்டி வரலாற்று மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பெரிய வரி சீர்திருத்தத்தை ஏற்படுத்திய பிரதமர், மத்திய நிதி அமைச்சர் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

FICCI தெலுங்கானா தலைவர் டி.முரளிதரன் கூறுகையில், ஜிஎஸ்டி தொடர்பாக மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவதற்கான எஃப்ஐசிசிஐயின் முயற்சிதான் இந்த மாநாடு என்றார் . புதிய வரி பகிர்வால் தென் மாநிலங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. FICCI மத்திய அரசின் ஆலோசனைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu minister palanivel thiagarajan states fears over gst regime have come true

Next Story
2015 முதல் குஜராத் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கும் நிதி 350% அதிகரிப்பு; சிஏஜி அறிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com