ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள கோபிகந்தர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பழங்குடி உண்டு உறைவிட பள்ளி ஒன்று அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியில் கணக்கு ஆசிரியராக சுமன் குமார் பணியாற்றிவருகிறார். பள்ளியில் கிளார்க் ஆக சோனேராம் சௌரே உள்ளார். பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், 9ஆம் வகுப்பு கணக்கு பாடத்தில் செய்முறை தேர்வில் 11 மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இவர்கள் பாடத்தில் தோல்வியுற்றுள்ளனர்.
இந்த மாணவர்கள் உள்பட மற்ற மாணாக்கர்களின் மதிப்பெண்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள் கணக்கு ஆசிரியர் சுமன் குமார் மற்றும் கிளார்க் சோனேராம் சௌரே ஆகியோரை, திங்கள்கிழமை (ஆக.29) மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.
இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட கல்வி வளர்ச்சி அதிகாரி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். எனினும் பாதிக்கப்பட்ட ஆசிரியரோ, கிளார்க்கோ எழுத்துப்பூர்வ புகார் எதுவும் இதுவரை அளிக்கவில்லை.
இதனால் காவலர்களால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியவில்லை. கணக்கு ஆசிரியர் சுமன் குமார் முதலில் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். பின்னர் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். இதற்கு சக ஆசிரியர்கள் மத்தியில் காணப்பட்ட பொறாமை உணர்வே என்று கூறப்படுகிறது.
மாணவர்கள், ஆசிரியர் தம்மை தோல்வியுற செய்துவிட்டார், அதற்கு கிளார்க்கும் உடந்தை.
அவர்தான் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டினர். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”