கர்நாடகாவில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சித்த ராமையா முதல் அமைச்சராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், 24 புதிய அமைச்சர்கள் சனிக்கிழமை (மே 27) பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் கவர்னர் மாளிகையில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் பல்வேறு சாதி மற்றும் சமூக அமைப்பை சேர்ந்தவர்களும் உள்ளனர். இதற்கிடையில், அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, சமூக நீதிக் கொள்கைகளை மனதில் வைத்து, அனைத்து ஜாதிகளுக்கும், பிராந்தியங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கும் விதிமுறைகளை காங்கிரஸ் பின்பற்றி வருவதாக சித்தராமையா கூறியுள்ளார்.
இது தொடர்பாக சித்த ராமையா, "நாங்கள் ஒரு முழு அளவிலான அமைச்சரவையை உருவாக்கியுள்ளோம். அனைத்து அமைச்சர்களும் கேபினட் அமைச்சர்கள். முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களை நாங்கள் அமைச்சர்களாக நியமிக்கவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளோம். புதிய முகங்களும் பழைய முகங்களும் உள்ளன. இது இளமை மற்றும் அனுபவத்தின் கலவையாகும்" என்றார்.
சித்தராமையாவுக்கும் சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவியைப் பிரிப்பது தொடர்பான விவாதம் ஏற்பட்டால் 30 மாதங்களில் அமைச்சரவையில் மொத்த மாற்றத்தை கட்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை பதவியேற்ற 24 புதிய அமைச்சர்களில் ஒன்பது பேர் புதுமுகங்கள் ஆவார்கள். இவர்கள் இதற்கு முன்பு அமைச்சர்களாக பதவி வகித்தது இல்லை.
அவர்களில் மைசூரில் உள்ள பெரியபட்னாவைச் சேர்ந்த கே.வெங்கடேஷ், தும்கூரின் மதுகிரியைச் சேர்ந்த கே.என்.ராஜண்ணா, உத்தர கன்னடாவின் பட்கலைச் சேர்ந்த மங்கல் வைத்யா, பெலகாவி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர், ராய்ச்சூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படாத என்.எஸ்.போசராஜு, பைரதி சுரேஷ் ஆகியோர் அடங்குவர்.
புதிய அமைச்சர்கள் பெரும்பாலும் கடவுளின் பெயரால் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர், கே என் ராஜண்ணா, துறவியும் ராமாயணத்தின் ஆசிரியருமான வால்மீகி நாயக்கரின் பெயரில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். தொடர்ந்து லிங்காயத் தலைவர் பசவண்ணர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் பெயரிலும் அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
சித்தராமையா அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் அமைச்சரான லக்ஷ்மி ஹெப்பால்கர், பஞ்சமசாலி லிங்காயத், பசவண்ணா, சத்ரபதி சிவாஜி, டாக்டர் அம்பேத்கர், அவரது வாக்காளர்கள் மற்றும் அவரது தாயார் ஆகியோரின் பெயரில் பதவியேற்றார்.
இவர் டி.கே. சிவக்குமார் ஆதரவாளர் ஆவார். பிதார் தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரஹீம் கான், அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அமைச்சரவையில் உள்ள இரண்டு முஸ்லிம் அமைச்சர்களில் ரஹீம் ஒருவர்.
புதிய காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சர்களின் லிங்காயத் - 8 (ஒரு பெண் உட்பட); வொக்கலிகா - 5; பட்டியல் சாதியினர் (எஸ்சி) - 7; எஸ்டிக்கள் - 3; ஓபிசிக்கள் - 6; முஸ்லிம் - 2; பிராமணர் - 1, ஜெயின் - 1; மற்றும் கிறிஸ்டியன் - 1 ஆகியோர் உள்ளனர்.
மூத்த தலைவரும் சித்தராமையா கூட்டாளியுமான எம்பி பாட்டீல், முன்னதாக மே 20 அன்று பதவியேற்றார். நம்தாரி ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த பாட்டீல், சில சமயங்களில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
முன்னதாக சேர்க்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராமலிங்க ரெட்டி ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர், கேஜே ஜார்ஜ் கிறிஸ்தவர்.
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள், ஆர் குண்டுராவ் மற்றும் எஸ் பங்காரப்பா ஆகியோரின் மகன்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். குண்டுராவின் மகன் தினேஷ் குண்டுராவ் 2வது முறையாக அமைச்சராகவும், ஓபிசி எடிகா சமூகத்தைச் சேர்ந்த பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா முதல் முறையாக அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
தொடர்ந்து, பெங்களூரு பகுதியில் இருந்து 6 அமைச்சர்களை காங்கிரஸ் தேர்ந்தெடுத்துள்ளது,
புதிய அமைச்சர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் இடம் கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ புட்டரநாக செட்டி ஒருவரை சட்டசபை துணை சபாநாயகர் பதவிக்கு ஏற்கச் சொன்னதாக சித்தராமையா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.