/tamil-ie/media/media_files/uploads/2022/08/tejashwi-yadav-1200-1.jpg)
பிகாரில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விலகியது. இதையடுத்து ஆட்சி மாற்றம் நடைபெற்றது. நிதிஷ் குமாரின் ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகளின் மகா கூட்டணி அமைக்கப்பட்டு, ஆட்சி மாற்றம் நடைபெற்றது. முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பொறுப்பேற்றார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார்.
ஆட்சி மாற்றத்திற்கு பின் முதல்முறையாக டெல்லி சென்ற தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா ஆகியோரை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, "நிதிஷ் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகியது, பாஜகவிற்கு விழுந்த அடி" என்றார்.
"பிகார் சட்டப்பேரவையில் பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளோம். பிற மாநிலங்களிலும் இது நடைபெறும். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூகம் மற்றும் வகுப்புவாத பதற்றம் மக்களை கவலையடைய செய்துள்ளது. இந்துக்கள், இஸ்லாமியர்களுகிடையே மோதல் போக்கு ஏற்படுத்தும் செயல் நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்து. பிகார் மீண்டும் ஒருமுறை நாட்டிற்கு புதிய திசையை காட்டியிருக்கிறது. இதற்காக நிதிஷ் குமார், சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ராஜா ஆகியோருக்கு நன்றி" என்றார்.
தொடந்து பாஜகவை சாடிய தேஜஸ்வி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாஜக சீர்குலைத்து வருகிறது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் என்ன நடந்தது. ஜார்க்கண்டில் என்ன நடக்கிறது. அந்த நாடகத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம். இதைத்தான் பாஜக செய்கிறது. காவல் நிலையங்களை விட மோசமாகி விட்டது. அவர்கள் யாரை பயமுறுத்த முயற்சிக்கிறார்கள்? பிகார் மக்களாகிய நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் எங்கள் சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்" என்று கூறினார்.
தேஜஸ்வி கூறுகையில், "பாஜக மாநில கட்சிகளை அழிக்க நினைக்கிறது. மாநில கட்சிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் நலனில் அக்கறை காட்டுகிறது. நிதிஷ் குமாரின் கட்சியை அழிக்க நினைத்தனர். ராம் விலாஸ்ஜி இரண்டாக உடைத்தார்கள். மாநில கட்சிகள் அழிக்கப்பட்டால் எதிர்க்கட்சி இருக்காது. எதிர்க்கட்சி இல்லை என்றால் ஜனநாயகம் இருக்காது. ஜனநாயகம் இல்லாவிட்டால், சர்வாதிகாரம் போல, ராஜாவைப் போல் ஆட்சி நடத்தப்படும் " ன்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.