தெலங்கானாவின் மக்கள்தொகையில் 56.33% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர் என்று அம்மாநிலத்தின் சமூக பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதி கணக்கெடுப்பு அறிக்கையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன, இது அமைச்சரவை துணைக் குழுவின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Backward classes make up for more than half of Telangana’s population: Caste survey
இந்த கணக்கெடுப்பின்படி, தெலங்கானா மாநில மக்கள் தொகையில் 17.43% பட்டியலினத்தவர் (எஸ்சி) மற்றும் 10.45% பழங்குடியினர் (எஸ்டி) உள்ளனர். மேலும், மக்கள் தொகையில் 15.79% இதர சாதியினர் (ஓசி) உள்ளனர்.
முழுமையான எண்ணிக்கையில், தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (BC) மக்கள் தொகை 1,99,85,767 ஆகும், இதில் 35,76,589 பி.சி முஸ்லிம்கள் உள்ளனர். எஸ்சி மக்கள் தொகை 61,84,319 மற்றும் எஸ்டி மக்கள் தொகை 37,05,929 உள்ளனர். மேலு அம்மாநிலத்தில் இதர சாதியினர் (ஓசி) மக்கள் தொகை 44,21,115 உள்ளனர்.
இந்த கணக்கெடுப்பின்படி, தெலங்கானா மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 44,57,012 - மக்கள் தொகையில் சுமார் 12.56%. இதில், பிசி முஸ்லிம்கள் 10.08% மற்றும் ஓ.சி முஸ்லிம்கள் 2.48% ஆகும்.
தெலுங்கானாவில் 50 நாட்களில் 3,54,77,554 பேரையும் 96.9% வீடுகளையும் இந்த ஆய்வு உள்ளடக்கியதாக மாநில அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அமைச்சர்கள் உத்தம் குமார் ரெட்டி, டி சீதக்கா, பொன்னம் பிரபாகர் மற்றும் தாமோதர் ராஜ நரசிம்மா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பிற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
94,261 கணக்கெடுப்புத் தொகுதிகளில் 94,863 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 9,628 மேற்பார்வையாளர்களைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 76,000 தரவு உள்ளீட்டு ஆபரேட்டர்கள் 36 நாட்களுக்குள் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கினர். பிப்ரவரி 4, 2024-ல் சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மாநில திட்டமிடல் துறையால் இது மேற்கொள்ளப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் "நலத்திட்டங்களைச் செம்மைப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவும், பலவீனமான பிரிவுகளை மேம்படுத்தவும் உதவும்" என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2023-ம் ஆண்டு தெலங்கானாவில் காங்கிரஸ் அளித்த தேர்தல் அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பும் ஒரு வாக்குறுதியாக இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் பிராந்திய பாரத ராஷ்டிர சமிதியை (பி.ஆர்.எஸ்) தோற்கடித்து, அந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
செய்தியாளர் சந்திப்பில், உத்தம் குமார் ரெட்டி, பீகாரில் இதேபோன்ற கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதை விட, தெலுங்கானாவின் செயல்முறை சீராகவும் திறமையாகவும் இருந்ததாகக் கூறினார். “தெலங்கானாவில் சமூக நீதிக்கு இது ஒரு வரலாற்று நாள். முடிக்கப்பட்ட அறிக்கை மாநிலத்தில் ஆட்சி மற்றும் கொள்கை வகுப்பை மறுவரையறை செய்யும் ஒரு மைல்கல்லாக நிற்கிறது” என்று அவர் கூறினார்.
இந்த அறிக்கை பிப்ரவரி 4-ம் தேதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி அறிவித்தார். அதே நாளில் சட்டமன்றத்திலும் இது ஒரு சிறிய விவாதத்திற்கு வைக்கப்படும் என்றார்.
“இது தரவு சார்ந்த நிர்வாகத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது, 2023 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றுகிறது. முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி மற்றும் துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், நிகழ்நேர சமூக-பொருளாதார தரவுகளின் அடிப்படையில் நலத்திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்துள்ளது” என்று அவர் கூறினார்.
இந்த கணக்கெடுப்பு அதன் வழியில் தடைகளை எதிர்கொண்டது. “முக்கிய செயல்பாட்டு சவால்களில் 1.03 லட்சம் வீடுகள் பூட்டப்பட்டிருந்தன, 1.68 லட்சம் குடும்பங்கள் ஆரம்பத்தில் பங்கேற்க தயங்கின, மேலும், 84,137 வீடுகள் குடியிருப்பு அல்லாத பயன்பாடு அல்லது குடியிருப்பாளர்கள் தெலங்கானா மாநிலம் அல்லாதவர்கள் என்பதால் தவறாக வகைப்படுத்தப்பட்டன” என்று உத்தம் குமார் ரெட்டி கூறினார்.
“தெலங்கானா வரலாற்றில் இந்த கணக்கெடுப்பு ஒரு பொன் அத்தியாயம், ஏனெனில். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். இது காங்கிரஸ் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது” என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் கூறினார்.