ஸ்ரீனிவாஸ் ஜன்யாலா - Sreenivas Janyala
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி அடிக்கடி டெல்லி சென்று வருவதாகவும், 10 மாதங்களில் 23 முறை டெல்லி சென்று விட்டு வந்துள்ளதாகவும் எதிர்க் கட்சிகள் விமர்சித்தன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Not going to Delhi to kneel before PM Modi like you’: Riled by criticism of capital trips, Telangana CM Revanth Reddy hits out at opposition
ரேவந்த் ரெட்டி டெல்லி சென்று வருவது குறித்து கடந்த அக்டோபரில் அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) தலைவர் கே.டி ராமாராவ், "ரேவந்த் ரெட்டி 10 மாதங்களில் 23 முறை டெல்லிக்கு பயணம் செய்திருக்கிறார். ஆனால்,மாநிலம் அதற்கான எந்த பலனையும் பெறவில்லை. டெல்லி சென்றுவதில் அவர் சாதனை படைக்கக்கூடும்" என்று கூறினார்.
இதனிடையே, அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மாநிலத்தின் பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறு பதவிகளுக்கான நியமனங்களை சுருக்கமாகப் பட்டியலிடுவது குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் ரேவந்த் ரெட்டி டெல்லி சென்று வருகிறார் என்றும் தகவல்கள் பரவியது.
இந்த நிலையில், தனது டெல்லி பயணங்கள் குறித்து எழுந்த விமர்சனங்களால் கொந்தளித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எதிர்க் கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார். தெலுங்கானாவுக்கு நிதி ஒப்புதல் பெறுவதற்காக தலைநகருக்கு பயணம் செய்ததாகவும், உங்களைப் போல் பிரதமர் மோடி முன் மண்டியிடவில்லை" என்றும் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
“மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் அனுமதிகளைப் பெறுவதற்கான செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காக டெல்லி சென்றேன். மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு மேற்கொண்டு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தேன்.
சில சக்திகள் எனது புது டெல்லி சுற்றுப்பயணங்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன. அமைச்சரவை விரிவாக்கத்திற்கு அனுமதி பெறவே நான் அங்கு செல்வதாக ஊடகங்கள் எப்போதும் கூறுகின்றன. இன்றைய டெல்லி பயணத்திற்கு அரசியல் முக்கியத்துவம் இல்லை. நாளை, லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுடன், மாநில அரசின் சார்பில், பார்லிமென்டில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிப்போம்.
நான் உங்களைப் போல பிரதமர் (நரேந்திர) மோடியிடம் மண்டியிடுவதற்காக டெல்லிக்கு செல்லவில்லை. ஒருவரின் காலைப் பிடித்துக் கொள்வதற்காகவோ, வழக்குகளில் இருந்து விடுபடுமாறும் வேண்டுகோள் விடுப்பதற்காகவோ அல்லது ஆளுநரிடம் அனுமதி வழங்கக் கூடாது எனக் கேட்கவோ நான் டெல்லிக்கு செல்லவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தெலுங்கானா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க., மாநிலத்திற்கு கட்சி கருவூலத்தில் இருந்து நிதி வழங்கவில்லை, மத்திய அரசின் கருவூலத்தில் இருந்து வழங்கப்படுகிறது. அரசியல் பாரபட்சம் காட்டாமல் மத்திய அமைச்சர்களை நேரில் சென்று சந்திக்கும் போதுதான் அரசுக்கு நிதி கிடைக்கும். ஒருவர் மீது கோபம், வெறுப்பு காட்ட இது நேரமில்லை” என்றார்.
ரேவந்த் ரெட்டியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் தினமான டிசம்பர் 9-ம் தேதி மாநில செயலகத்தில் தெலுங்கானா தாலி (அம்மா) சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு ராகுல் காந்தியை முதல்வர் சந்தித்து அவரை அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.