வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது, தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அம்மாநில டி.ஜி.பி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அம்மாநில டி.ஜி.பி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. இதில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்தது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது.
தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்த நிலையில், பெரும்பான்மை இடங்களை உறுதி செய்து அம்மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை வெளியெற்றியது.
தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தெலங்கானா மாநில டி.ஜி.பி அஞ்சனி குமார் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.15 அளவில், அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது, பதவிப் பிரமாணம் குறித்து விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது, தெலங்கானா மாநில டி.ஜி.பி அஞ்சனி குமார் தேர்தல் விதிகளை மீறி அரசியல் கட்சித் தலைவரை சந்தித்ததாகக் கூறி, தேர்தல் ஆணையம் அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ரேவந்த் ரெட்டியைச் சந்திக்க டி.ஜி.பி அஞ்சனி குமார் உடன் சென்ற அம்மாநில கூடுதல் டி.ஜி.பி சஞ்சய்குமார் ஜெயின் மற்றும் சி.ஐ.டி போலீஸ் தலைமை மகேஷ் பகவத் ஆகிய மேலும் 2 ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது, தெலங்கானா மாநில டி.ஜி.பி அஞ்சனி குமார் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, டி.ஜி.பி அஞ்சனி குமார் தேர்தல் ஆணையத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“