துபாய் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கட்டட தொழிலாளரின் சிகிச்சைக்கான செலவான ரூ. 1.52 கோடியை ( 7,62,555 UAE திர்காம்கள்), துபாய் மருத்துவனை மனிதாபிமான அடிப்படையில் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் கொல்லப்பள்ளி மண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் லிங்கையா ஒத்னாலா (வயது 42). இவர் 2 ஆண்டுகளாக துபாயில் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு ஏப்ரல் 23ம் தேதி திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது, இதனையடுத்து, அவர் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எடுக்கப்பட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
80 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ராஜேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.1.52 கோடிக்கு பில் வழங்கப்பட்டது. ஆனால், ராஜேஷோ, அந்த பணத்தை கட்டும் நிலையில் இல்லை.
துபாயில் உள்ள வளைகுடா தொழிலாளர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் குண்டெல்லி நரசிம்மா, ராஜேஷை தொடர்பு கொண்டார். இந்த விவகாரத்தை, துபாயில் உள்ள இந்திய துணை தூரகத்தின் பார்வைக்கு தன்னார்வலர் சுமத் ரெட்டி மூலம் கொண்டு சென்றார்.
சுமத் ரெட்டியும், BAPS சுவாமிநாராயண் டிரஸ்டை சேர்ந்த அசோக் கொடேச்சாவுடன் இணைந்து இந்த விவகாரத்தை, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் தொழிலாளர் நலப்பிரிவு அதிகாரி ஹர்ஜித் சிங்குடன் முறையிட்டனர். ஹர்ஜித் சிங், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு எழுதிய கடிதத்தில், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைக்கான தொகையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற மருத்துவமனை நிர்வாகம், ராஜேஷை நல்லமுறையில் டிஸ்சார்ஜ் செய்தது மட்டுமல்லாது அவருக்கு ஒரு உதவியாளரையும் நியமித்து, இந்தியா செல்ல இலவசமாக விமான டிக்கெட் வழங்கியும், உடனடி செலவுக்காக, ரூ. 10 ஆயிரமும் வழங்கியது.
ஐதராபாத் திரும்பிய ராஜேஷை, அவரது குடும்பத்தினருடன் தெலுங்கானா வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறை அதிகாரி சிட்டிபாபு வரவேற்றார். பின், ராஜேஷ் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு பிறகு, ராஜேஷ், தனது சொந்த கிராமத்திற்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil