Telangana governor Tamilisai Soundararajan helps stranded truck drivers : இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அனைவருக்கும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இடம் பெயர்ந்து கூலி வேலைகளை செய்து வரும் பலரும் இதனால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக வெளி மாநிலங்களுக்கு பொருட்களை கொண்டு போய் சேர்க்கும் லாரி ஓட்டுநர்கள்.
அவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப இயலாமல் இங்கும் அங்கும் சிதறி கிடக்கின்றனர். அவர்களுக்கான உணவு மற்றும் உறைவிடம் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் சில ஓட்டுநர்கள் மாநில அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் லாரி ஓட்டுநர்கள் எங்களின் சொந்த ஊருக்கு போக இயலாமல் தவித்து வருகின்றோம். சாப்பாடு இல்லை, கடைகளுக்கு செல்ல முயன்றால் காவல்துறையினர் அடித்து தாக்குதல் நடத்துகின்றனர். சொந்த மாநிலத்திற்கு திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
Advertisment
Advertisements
அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்களை நாடு முழுவதும் நாங்கள் சப்ளை செய்கின்றோம். ஆனால் எங்களுக்கோ சப்பாடு இல்லை. தண்ணி இல்லை. 2 நாட்களாக சோறில்லாமல் தவிக்கின்றேன். எங்களின் நிலை மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். இந்த செய்தி தமிழகத்திற்கு போக வேண்டும். அனைவருக்கும் இந்த விசயம் தெரிய வேண்டும். சாப்பாட்டுக்கு வழி செய்யுங்கள். எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று ஐதராபாத்தில் இருந்து அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில ஆளுநராக பணியாற்றும் தமிழிசை சௌந்தரராஜன், தன்னுடைய முகநூல் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவு செய்து என்னுடைய செக்ரட்டரியிடம் அவர்களை உடனடியாக கண்டு பிடித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐதராபாத்தில் இருக்கின்றார்கள் என்பதை தவிர வேறெந்த தகவல்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.