கடந்த ஆண்டு தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பொதுத்தேர்தல் முடிவுற்ற பிறகு ராஜ்யசபா உறுப்பினராக தேர்வாகி ஏதேனும் முக்கிய பொறுப்பு வகிப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்த பதவி மாற்றம் நிகழ்ந்தது. பாஜக தமிழக தலைவர் டூ தெலுங்கானா ஆளுநர். கட்சி பாகுபாடின்றி அனைவரும் “சகோதரி தமிழிசை சௌந்தரராஜனுக்கு தரப்பட்ட பணியில் அவர் மேலும் சிறக்க வேண்டும்” என்று மனதார வாழ்த்துகளை கூறினார்கள்.
அங்கே சென்ற போது தமிழிசை சௌந்தரராஜனுக்கு தெலுங்கு தெரியாது. மொழி இல்லாமல் சமாளிப்பீர்களா என்று தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிரூபர் ஜனார்தன் கௌசிக் கேட்ட போது, நிச்சயமாக கற்றுக் கொள்வேன் என்று கூறியிருந்தார். அவரின் கற்றல் திறன் குறித்து இப்போது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நேரடியாக தமிழிசையின் ட்விட்டர் பக்கத்திற்கு செல்லுங்கள். இன்னும் கொஞ்சம் நாளிலே அவர் கவிதையும் எழுத துவங்கி விடுவார் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
ஆயிரம் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தமிழிசையை தமிழகம் ஏதோ ஒரு வகையில் மிஸ் செய்கிறது தான். ஆளுநராக பதவி பெற்று சென்றாலும் மக்களை சந்திப்பதிலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதிலும் தமிழிசை சுணக்கம் காட்டுவதே இல்லை. கொரோனா தொற்று தீவிரமடைய துவங்கிய காலத்தில் இருந்தே அவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து பலருக்கும் தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கொரோனா நோயாளிகளுக்கு நிம்ஸ் மருத்துவமனை சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால் அங்குள்ள ஊழியர்கள் 20 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஒரு வித அச்ச உணர்வு அங்கு பணியாற்றும் நபர்கள் மத்தியில் நிலவி வருகிறது. பணியாளர்கள் மத்தியில் இருக்கும் அச்ச உணர்வை நீக்க ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களை பார்த்துள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் பேசி, அவர்களின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டிய அவரின் இந்த செயல் அனைவராலும் வெகுவாக வரவேற்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil