தன்னை ஒரு பெண் ஆளுநர் என்றும் பாராமல் கே. சந்திர சேகர் ராவ் (கேசிஆர்) அவமானப்படுத்தி வருவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்றன.
நான் மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்றபோது, மாநில வளர்ச்சிக்கு சில செயல்திட்டங்கள் வைத்திருந்தேன். ஆளுநர் பதவிக்கென்று சில நெறிமுறைகள் உள்ளன.
ஆனால் இதையெல்லாம் கேசிஆர் அரசு பின்பற்றுவதில்லை. நான் எங்கு சென்னாலும் எந்த நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. முதல்வர், எம்எல்ஏக்கள் ஆளுநர் அலுவலகத்துக்கு வருவதில் என்ன தடை இருக்க போகிறது?
அது என்ன தீண்டதகாத இடமா? எனது தனிப்பட்ட நடவடிக்கைகளில் எந்தத் தவறும் கிடையாது. நான் சர்ச்சைக்குரிய நபரும் கிடையாது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் கே. சந்திர சேகர் ராவ் கலந்துகொள்ளாதது தவறானது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் உங்களுக்கு என்னப் பிரச்னை இருக்கப் போகிறது? உள்துறை அமைச்சர் அமித் ஷா, முக்கிய விவகாரங்கள் குறித்து பேசத் தயாராக இருந்தார்.
மேலும் குடியரசுத் தினத்தில் கொடியேற்றவும் எனக்கு உரிமை மறுக்கப்பட்டது. கொரோனா பரவலைக் காரணம் காட்டி ஆளுநர் அலுவலகத்தில் கொடியேற்றிக் கொள்ளும் படி கூறினர்.
அனைத்து மாநிலங்களிலும் குடியரசுத் தின அணிவகுப்பு நடந்த போது, தெலங்கானா மாநிலத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. எந்த வொரு மாவட்டத்துக்கு சென்றாலும், அங்கு செல்லக் கூடாது, இங்கு செல்லக் கூடாது என்கிறார்கள்.
ஆளுநர் மாளிகை அவமானப்படுத்தப்படுகிறது. ஒரு பெண் கவர்னர் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பது வரலாற்றில் எழுதப்படும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil