தெலங்கானா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையில்லாமல் நாளை (மார்ச் 7) தொடங்கும் என அம்மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் நாளை (மார்ச் 7) நடைபெறுகிறது. ஆனால், ஆளுநர் உரையில்லாமல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்த விவாதங்கள் எழுந்த நிலையில், இந்த கூட்டத்தொடர், ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இல்லை என்பதாலும் ஏற்கனவே நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடர்ச்சி என்பதாலும் ஆளுநரின் உரை தேவையில்லை என்று தெலங்கானா மாநில அரசு விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், ஆளுநர் உரையில்லாமல் சட்டப்பேரைக் கூட்டத்தொடர் நடத்த உள்ள தெலங்கானா அரசின் முடிவுக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 5 மாத இடைவெளிக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடினால் அதை புதிய கூட்டத்தொடராகத்தான் கருத வேண்டும் என்றும் ஆளுநரின் உரை இன்றி ஆண்டின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவது மரபை மீறிய செயல் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர் உரை இடம் பெறாததால் முந்தைய ஆண்டில் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கூடிய வாய்ப்பை பேரவை உறுப்பினர்கள் இழந்துவிட்டதாகவும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”