Sreenivas Janyala
Telangana transport strike : தெலுங்கானா மாநிலத்தின் மாநில போக்குவரத்து கழகமான (Telangana State Road Transport Corporation) டி.எஸ்.டி.ஆர்.சி சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அரசு குறிப்பிட்ட காலத்துக்குள் பணியாளர்கள் வேலைக்கு திரும்பவில்லை என்றால் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த மாட்டோம் என்று அறிவித்தார். அந்த காலக்கேடானது சனிக்கிழமை மாலை 6 மணி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்திற்குள் சுமார் 47 ஆயிரம் நபர்கள் தங்களின் பணிக்கு செல்லாத காரணத்தால் அவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் டி.எஸ்.ஆர்.டி.சி பணியாளர்களின் சம்பளம், பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதலை முறைப்படுத்துதல் போன்ற விசயங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தெலுங்கானா மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஞாயிற்றுக் கிழமையன்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பி. அஜய்குமார் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போக்குவரத்து சங்க நிர்வாகிகளிடம் “தசரா காலத்தின் போது, இது போன்ற ஒரு போராட்டத்தை நடத்தி பெரிய தவறு இழைத்துவிட்டீர்கள்” என்று கூறினார். மேலும் எதிர்வருங்காலத்தில் இது போன்று பிளாக்மெயில்களால் அரசை பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றும் அறிவித்தார்.
அரசு நிர்ணயித்த காலக்கெடுவில் மீண்டும் பணிக்கு வராதவர்களை, பணியில் திருப்பி எடுத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. தற்போது வெறும் 1200 பணியாளர்கள் மட்டுமே வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பேருந்துகள் 2500-ஐ தற்போது நியமித்து போக்குவரத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது தெலுங்கானா அரசு. இந்த 1200 நபர்கள் காலக்கெடுவிற்குள் வேலையில் இணைந்தவர்கள் அல்லது போராட்டத்திற்கு செல்லாதவர்கள் ஆவார்கள்.
சந்திரசேகர் ராவ் அதிர்ச்சி நடவடிக்கை
மிக விரைவில் புதிய போக்குவரத்து ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் எந்தவிதமான சங்கங்களிலும் ஈடுபட்டு செயல்படமாட்டார்கள் என்பதையும் அறிவித்துள்ளது அம்மாநில அரசு. ஏற்கனவே பெரும் நஷ்டத்தில் ஓடுகிறது டி.எஸ்.ஆர்.டி.சி . தற்போது இருக்கும் பேருந்துகளில் 50% பேருந்துகள் தனியாரால் இயக்கப்படும் பட்சத்தில், ஆர்.டி.சிக்கு அதிக லாபத்தினையே தரும் என்றும், இன்னும் 15 நாட்களில் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 5 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் டி.எஸ்.ஆர்.டி.சி இயங்கி வருகிறது. இது போன்ற ஒரு இக்கட்டான சூழலில் இந்த போராட்டம் என்பது மிகவும் பொறுப்பற்றதாகவும், சட்டத்திற்கு புறம்பானதாகவும் இருக்கிறது. இதற்கான நிரந்திர தீர்வினை நாம் எட்டியே ஆக வேண்டும் என்றும் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஆர்.டி.சியே கிடையாது. ஆனால் நாங்கள் ஊழியர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த பின்பும் இவர்கள் ஏன் போராட்டத்திற்கு செல்கிறார்கள்? சி.பி.எம். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த போது ஆர்.டி.சியை அரசோடு இணைத்தார்களா? இல்லை கேரளாவில் தான் இப்படி நடந்ததா? பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் இப்படி எந்த ஒரு நடவடிக்கை எடுத்தும் பார்க்கவில்லை. இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியிலும் இது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடவும் இல்லை என்றும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து முடிவுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு
காங்கிரஸ் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவரான எம். பாட்டி விக்கிரமர்கா கூறுகையில் “பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவோம் என்று கூறி அச்சத்தை உருவாக்கியுள்ளார் ராவ். பிரச்சனைகள் என்ன என்று கேட்பதற்கு பதிலாக இது போன்ற முடிவுகளை மேற்கொண்டு ஊழியர்களை வேலையில்லா நிலைக்கு தள்ளுகிறார். இதனை எதிர்த்து நிச்சயமாக நாங்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என அறிவித்துள்ளார் அவர்.
பாஜக தலைவர் கிருஷ்ண சாகர் ராவ் கூறுகையில், டி.எஸ்.ஆர்.டி.சி. தலைவர்களில் ஒருவரை கூட சந்திக்காமல் இது போன்று முடிவை எடுத்துள்ளார் சந்திர சேகர் ராவ் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.