ஏப்ரல் 2020-ல், நாடு முழுவதும் லாக்டவுன் விதிக்கப்பட்ட பிறகு, ரசியா பேகம் ஆந்திராவில் ஒரு நண்பரின் வீட்டில் சிக்கித் தவித்த தனது மகனை மீட்டு வர ஸ்கூட்டரில் 1,400 கிமீ தூரம் பயணித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரசியா பேகம் மீண்டும் தனது மகன் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிப்பதால், தனது மகன் பத்திரமாக நாடு திரும்பி தன்னுடன் வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
“என் மகன் மிகவும் தைரியமானவன். இப்போதும் அவன் என்னிடம் கவலைப்பட வேண்டாம், அவன் உயிருடன் வீட்டிற்கு வருவேன் என்று கூறுகிறான். நான் போர் பற்றிய செய்திகளை தொடர்ந்து பார்க்க வேண்டாம் என்று அவன் விரும்புகிறான். என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று பயப்படுகிறான். அவன் சொல்கிறான், ‘நான்தான் உங்கள் செய்தி. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நான் தொடர்பில் இருப்பேன்.” என்று தனது மகனைப் பற்றி ரசியா பேகம் கூறுகிறார். இப்போது ஒரு வாரத்திற்கும் மேலாக, பேகம் ஒவ்வொரு நிமிடமும் தன் மகனைப் பார்க்கவும், அவனிடம் இருந்து வார்த்தைகளைக் கேட்கவும் காத்திருக்கிறார்.
சுமி ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் எம்.பி.பி.எஸ் மாணவர் முகமது நிஜாமுதீன் அமன் (21), உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் ஒருவராக, மீட்கப்படுவதற்காக காத்திருக்கிறார். உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் இணையம் ஆகியவற்றின் விநியோகம் குறைந்து வருவதற்கு, மத்தியில் அவர் தனது விடுதியின் அடித்தளத்தில் 800 பேருடன் தங்கியுள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் வீடியோ அழைப்பில் வரும்போது, அவரது மகன் 50 வயதான பேகத்தை சிரித்த முகத்துடன் வரவேற்று தைரியமாக இருக்குமாறும் கடவுளை நம்பும்படியும் கேட்டுக்கொள்கிறார்.
“அவன் ஆன்லைனில் இருக்கிறானா அல்லது தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்க எனது ஃபோனை நான் அடிக்கடி எடுத்து பார்க்கிறேன். என்னால், இங்கே வீட்டில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அவரை அழைத்து வர நான் உக்ரைனுக்கு செல்ல முடியாது, இல்லையா?” என்று தெலங்கானாவில், போதன் அருகே உள்ள சலம்பட் கிராமத்தில், உள்ளூர் மண்டல் பரிஷத் பள்ளியின் தலைமையாசிரியையாக இருக்கும் ரசியா பேகம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொலைபேசியில் கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் முதல் அலை தொடங்கியபோது, ரசியா பேகம் தனது அமனை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருவதற்காக தனது கிராமத்திலிருந்து அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள நெல்லூருக்கு ஸ்கூட்டரில் தனியாக பயணம் செய்து அனைவரையும் நெகிழச் செய்து ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது, ரசியா பேகம் தனது மகனை மீட்டுத் தருமாறு மாநில அரசிடம் முறையிட்டுள்ளார். நிஜாமாபாத் மாவட்ட ஆட்சியர் அவரைப் பார்ப்பதற்கு அனுமதி அளித்தார். மேலும், உக்ரைன் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் சேகரித்தார். அதே நேரத்தில், உள்ளூர் எம்எல்சி கல்வகுந்தலா கவிதா எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார் என்று ரசியா பேகம் கூறினார்.
நிஜாமுதீன் அமன் சனிக்கிழமை காலையிலும் வெள்ளிக்கிழமை இரவு தாமதமாகவும் ரசியாவை போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். “நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வெளியில் குண்டுவீச்சும், ஷெல் தாக்குதல்களும் அதிகம் நடக்கிறது. அவர்கள் தங்களிடம் உள்ள உணவை வைத்துக்கொண்டு சமாளிக்கிறார்கள். ஆனால், அது மற்றொரு நாளுக்கு போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு போதுமான குடிநீர் இல்லை. பெரும்பாலும், அவர்களுக்கு மின்சாரம் மற்றும் இணைய வசதி இல்லை” என்று சமீபத்தில் தனது மகன் பேசியதை ரசியாக பேகம் நினைவு கூர்ந்தார்.
சுமி ஸ்டேட் பல்கலைக்கழக மாணவர்களின் வீடியோ சனிக்கிழமை நண்பகல் வைரலானது. அங்கே மூவர்ணக் கொடியை ஏந்திய ஒரு குழு, 10 நாட்கள் போருக்குப் பிறகு பொறுமை இழந்துவிட்டதாகவும், வெளியேற்றத்திற்காக காத்திருப்பதை விட எல்லைக்கு நடக்கத் தொடங்குவதாகவும் கூறுவதைக் கேட்க முடிந்தது. மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் பொதுமக்கள் வெளியேறுவதற்கு ரஷ்யா போர்நிறுத்தத்தை அறிவித்ததை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது. மரியுபோலுக்கும் சுமிக்கும் இடையே 600 கி.மீக்கு மேல் தூரம் ஆகும். மாணவி ஒருவர் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருப்பதாக அந்த வீடியோவில் கூறினார்.
இது தொடர்பாக பேகம் தனது மகனிடம் இருந்து தகவல் எதையும் கேட்கவில்லை. “ஒரு தாயாக, நான் அவனுடைய பாதுகாப்பிற்காக மட்டும் பிரார்த்தனை செய்ய முடியும். என்னால் முடிந்த இடத்திலிருந்து அவனை அழைத்து வந்தேன். நான் இப்போது செய்வதெல்லாம் அவன் தொலைபேசியில் ஆன்லைனில் வருவதற்காகக் காத்திருப்பதுதான்.” என்று கூறினார்.
உறவினரின் ஆலோசனையின் பேரில், கடந்த ஆண்டு அமனை எம்.பி.பி.எஸ் படிக்க உக்ரைனுக்கு அனுப்ப அவருடைய தாயார் ரசியா பேகம் ஒப்புக்கொண்டார். அவர் முதலில் பட்டயக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் மருத்துவராக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். “இங்கே எம்.பி.பி.எஸ் படிப்பதை ஒப்பிடும்போது, வெளிநாடுகளில் செலவு குறைவாக இருக்கிறது. மேலும், நம் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கே படிக்கின்றனர். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நாங்கள் நினைத்தோம், என் மகன் சென்று ஐந்து மாதங்களுக்குப் பிறகு நாடு ஒரு போரை சந்திக்கும் என்று யாரும் நினைக்கவில்லை” என்று ரசியா பேகம் புலம்பினார். இப்போதைக்கு அமனின் சிரித்த முகம்தான் இந்த தாயைக் காப்பாற்றுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”