Tamil National Update : தெலுங்கானாவின் ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜனை சந்தித்த பாஜகவினர், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையேயான தொடர்பு குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்த பாஜக தலைவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், சில டிஆர்எஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பிற கட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இடையேயான தொடர்பு குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். சிபிஐ விசாரணையால் மட்டுமே இத்தகைய பிணைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் ஆளுனர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பாஜக தலைவர்கள், டிஆர்எஸ் தலைவர்களும் அவர்களின் அடியாட்களும் ஒவ்வொரு தொகுதியிலும் ‘ஆளுகிறார்கள்’ என்றும், இதில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர்கள் எம்.எல்.ஏ எம்.ரகுநந்தன் ராவ், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.பிரேமேந்தர் ரெட்டி, முன்னாள் எம்எல்சி என்.ராமச்சந்தர் ராவ், தமிழக விவகாரங்களுக்கான அக்கட்சியின் இணைப் பொறுப்பாளர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி, பாஜகவின் மேடக், கம்மம். மற்றும் ஜெயசங்கர்-பூபாலப்பள்ளி மாவட்டத் தலைவர்கள் கதம் ஸ்ரீனிவாஸ், கல்லா சத்தியநாராயணா மற்றும் நந்து ஜனார்தன் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், இது குறித்து தெலுங்கானா பாஜக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,, “அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக உங்கள் தலையீட்டைக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை. கம்மம் மற்றும் ராமயம்பேட்டையில் நடந்த கொடூரமான சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன,” என்று கூறியதுடன், இந்த இரண்டு நிகழ்வுகளிலும், காவல்துறையினரின் குற்றமும் வெளிப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் 2018-ம் ஆண்டு தெலுங்கானாவில், டிஆர்எஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆளுங்கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களின் மனதில் ஆணவ உணர்வு மேலோங்கியிருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்தனர். முதலமைச்சருடன் சேர்ந்து, ஒவ்வொரு டிஆர்எஸ் ஊழியரும் தெலுங்கானா மக்களை தங்கள் அடிமைகள் என்று நினைக்கிறார்கள்.
பல வழக்குகளில் போலீசார் குற்றவாளிகளுடன் கைகோர்த்து இருக்கிறார்கள், சில சமயங்களில் வாய்மூடி வெறும் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள்” என்று பாஜக பிரதிநிதிகள் குழு தனது குறிப்பில் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“