நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள் மீதும், முக்கிய நகரங்களிலும் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு பதுங்கியிருந்த 10 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் தீவிரவாத ஒழிப்புப் படையினர் நேற்று திடீர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டம், லக்னோ, சிம்போலி உள்ளிட்ட நகரங்களில் நடந்த சோதனையில் ஹர்கத் உல் இ இஸ்லாம் என்ற பெயரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக தீவிரவாத இயக்கம் செயல்பட்டது தெரியவந்தது.
அந்த நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்ததாக முப்தி முகமது சொஹைல் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், கிழக்கு டெல்லிப் பகுதியில் 5 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீஸ் உதவியுடன் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெடிப்பொருட்கள், ஆயுதங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள். மேலும், கைது செய்யப்பட்டவர்களில், பொறியியல் பட்டதாரிகள், வெல்டிங் பட்டறை நடத்தியவர், ஜவுளி வியாபாரி என பலதரப்பட்ட இளைஞர்களும் இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அனஸ் யூனுஸ்(AMITY பல்கலையில் சிவில் இன்ஜினியரிங் மாணவன்), ரஷித் சஃபர் ரக் என்கிற சஃபர், சயீத் மற்றும் ரயீஸ், ஜுபேர் மாலிக் மற்றும் சயித் மாலிக், சகிப் இஃப்தேகர், முகமது இர்ஷத், முகமது அசம்,
மேற்கு உத்தரப்பிரதேசப் பகுதியான அம்ரோஹா மாவட்டத்தில் இந்த இயக்கம் செயல்பட்டுவந்த இடத்தில் இருந்து வெடிகுண்டை கையாள்வது மற்றும் உருவாக்குவது எப்படி என விளக்கும் வீடியோ, ராக்கெட் லாஞ்சர், 12 கைத்துப்பாக்கிகள், 150 தோட்டாக்கள், கையெறி குண்டுகள், செல்போன் சர்க்யூட்டுகள், 91 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், 3 லேப்டாப்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. டெல்லி உள்ளிட்ட வட மாநில நகரங்களில் தொடர் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.