பாடப்புத்தகத் திருத்தங்கள், மதமாற்றத் தடைச் சட்டம், பசு வதைச் சட்டம் உள்ளிட்ட முந்தைய பாஜக அரசின் சர்ச்சைக்குரிய முடிவுகளை காங்கிரஸ் அரசு மறுஆய்வு செய்யும் என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே புதன்கிழமை (மே 24) தெரிவித்தார்.
ஹிஜாப் பிரச்னை குறித்து பேசுகையில், “நாங்கள் அதன் சட்ட அம்சத்தை (ஹிஜாப் பிரச்சினை) ஆராய்ந்து முடிவெடுப்போம். ஒரு குறிப்பிட்ட உத்தரவு காரணமாக கிட்டத்தட்ட 18,000 மாணவர்கள் பள்ளிகளில் இருந்து வெளியேறியதாக தரவுகள் உள்ளன.
நீதித்துறை சட்டம் இயற்றினால், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும்? நமது சட்டம் மோசமாக இருந்தால் நீதிமன்றங்கள் தலையிடட்டும். பிற்போக்குத்தனமான எந்தவொரு நிர்வாக உத்தரவு, மசோதா அல்லது அவசரச் சட்டம் கர்நாடகாவை மீண்டும் பாதையில் கொண்டு வர மறுபரிசீலனை செய்யப்படும்” என்றார்.
தொடர்ந்து, “பாடப்புத்தக திருத்தம், மதமாற்ற தடை சட்டம், பசு வதை தடுப்பு சட்டம் மற்றும் பா.ஜ., கொண்டு வந்துள்ள அனைத்து சட்டங்களும், காங்கிரஸ் அரசால் மறுஆய்வு செய்யப்படும். மாநிலத்தின் பொருளாதார வளம் மற்றும் கன்னடர்களின் நலன்களை பாதுகாக்க முடிவு எடுக்கப்படும்” என்றார்.
முன்னதாக, திங்களன்று (மே 24) புதிய அரசாங்கம் பாஜக அனுமதித்த திட்டங்களுக்கு நிதி செலுத்துவதை நிறுத்த முடிவு செய்தது.
முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் அமல்படுத்திய சர்ச்சைக்குரிய பள்ளிப் பாடப்புத்தகத் திருத்தங்கள் காங்கிரஸ் தலைவர்களால் காவிமயமாக்கல் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குறித்து முதல்வர் சித்தராமையாவுக்கு கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். அவர்களில் ஒருவரான விபி நிரஞ்சனாராத்யா, அதன் சர்ச்சைக்குரிய தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மென்ட்ஸ் (கேஎம்எஸ்) தலைவர் டி.சஷிகுமாரும் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி, நடப்பு கல்வியாண்டில் மாற்றப்பட்ட உரையை பாடத்தில் இருந்து நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் கர்நாடகா பாஜக அரசு, பசு மாடுகளை பாதுகாத்தல் சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்தப் பாதுகாப்புச் சட்டம் விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்குகிறது. இதிலும் திருத்தம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், மதமாற்றத் தடைச் சட்டம் மே 2022 முதல் அமலுக்கு வந்தது. அதில், எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது வேறு விதமாகவோ ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு தவறான சித்தரிப்பு, பலாத்காரம், தேவையற்ற செல்வாக்கு, வற்புறுத்தல், வசீகரம் போன்றவற்றைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்யவோ அல்லது மாற்றவோ முயற்சிக்கக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி, மதம் மாறிய நபரின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது மதம் மாறிய நபருடன் தொடர்புடைய வேறு நபர் அல்லது மதம் மாறிய நபரின் சக ஊழியர் கூட மதமாற்ற புகார்களை பதிவு செய்யலாம். தண்டனையில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அடங்கும்.
இந்த நிலையில் கார்கே ட்வீட்டில், “முந்தைய பாஜக அரசாங்கம் நிறைவேற்றிய எந்த மசோதாவையும் மறுஆய்வு செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. இது மாநிலத்தின் நற்பெயரை பாதிக்கிறது, முதலீட்டைத் தடுக்கிறது, வேலைவாய்ப்பை உருவாக்காது,
அரசியலமைப்பிற்கு விரோதமானது, தனிநபரின் உரிமைகளை மீறுகிறது. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சமமான கர்நாடகத்தை உருவாக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“