மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தநிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏகள் பலர் தாக்கரே அரசுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து விலகினர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதையடுத்து ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. ஷிண்டே முதலமைச்சராக பதவி ஏற்றார்.
சிவசேனாவின் 56 எம்எல்ஏக்களில் 40க்கும் மேற்பட்டோர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தநிலையில், பெரும்பான்மையான எம்எல்ஏக்கள், லோக்சபா எம்பி 12 பேர் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் தங்களிடம் உள்ளதால், உண்மையான சிவசேனா தாங்கள் தான் என ஷிண்டே தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் தங்களிடம் உள்ளனர் என உத்தவ் தாக்கரே தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், லோக்சபா மற்றும் மகாராஷ்டிர சட்டசபையில் ஷிண்டே தரப்புக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி ஷிண்டே இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். உத்தவ் தாக்கரே தரப்பும், சின்னம் தங்களுக்குத் தான் சொந்தம் என தெரிவித்தது. இதையடுத்து, ஆவணங்கள், சட்டமன்ற எம்எல்ஏக்கள் ஆதரவு, கட்சி அமைப்பு நிர்வாகிகள் ஆதரவு உள்ளிட்ட விவரங்களை இருதரப்பும் சமர்ப்பிக்குமாறு ஆணைய தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தாக்கரே, ஷிண்டே தரப்பு மூத்த தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகள் ஆதரவு பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஷிண்டே தரப்பு தாக்கரே அணியிலிருந்து நிர்வாகிகளை பெற முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருதரப்பினரும் நிர்வாகிகளிடமிருந்து கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் விசாரணையின்போது, தங்களுக்கான ஆதரவை எழுத்துபூர்வமாக நிரூபிக்க ஆவணங்கள் முக்கிய பங்கு வசிக்கும். சின்னம் பெற கூடுதல் ஆதரமாக விளங்கும். மகாராஷ்டிர சட்டமன்றத்தின் முன்னாள் முதன்மைச் செயலாளர் அனந்த் கல்சே கூறுகையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு எம்பி, எம்எல்ஏக்கள் பெரும்பான்மை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சிவசேனாவை யார் நிர்வகிப்பது என்று உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின்படி, இருதரப்பினர் ஆதரவு, பிரமாணப் பத்திரங்கள், உறுப்பினர் எண்ணிக்கை ஆதரவு அவசியம். அதனால்தான் இருதரப்பினரும் பிரமாணப் பத்திரங்களைப் பெற்று ஆதரவு பெறுவதில் கவனம் செலுத்துகிறார்கள் என்று கூறினார்.
இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளிடம் பேசுகையில், "நாம் தான் உண்மையான சிவசேனா. நமக்கான ஆதரவுகளை பிரமாணப் பத்திரங்களாக சேகரிக்க வேண்டும். உறுப்பினர் படிவங்களை நிரப்ப வேண்டும். இந்த முறை எனது பிறந்தநாளில் பிரமாணப் பத்திரங்கள் மற்றும் உறுப்பினர் படிவங்களை பரிசளியுங்கள்" என்று நிர்வாகிகளிடையே தாக்கரே கூறினார்.