எரிக்சன் நிறுவனத்துக்கு தர வேண்டிய 550 கோடியை மார்ச் 19-ம் தேதிக்குள் தரா விட்டால், 3 மாதம் சிறை செல்ல நேரிடும் என தொழிலதிபர் அனில் அம்பானிக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தப் பணத்தை செலுத்த பல்வேறு வழிகளில் முயன்றுக் கொண்டிருந்தார் அனில். தொகையை செலுத்தி விடுவாரா அல்லது சிறை செல்வாரா என சினிமா கிளைமேக்ஸ் காட்சியைப் போல் பரபரப்புடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது வர்த்தக உலகம்.
இந்நிலையில் கடைசி நிமிடத்தில் தன் சகோதரன் கீழே விழாமல் தாங்கிப் பிடித்து, பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார் முகேஷ் அம்பானி.
”என்னுடைய அண்ணன் முகேஷ் மற்றும் நீதாவுக்கும் என்னுடைய இதயப் பூர்வமான நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சரியான நேரத்தில் எனக்கு பக்கபலமாக நின்று தோள்கொடுத்து உதவிய இருவருக்கும் நானும் என்னுடைய குடும்பத்தினரும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அனில் அம்பானி.
“550 கோடி பணத்தை வட்டியுடன் சேர்த்து, மொத்தமாக செட்டில் செய்தாகி விட்டது” என்கிறார் ஆர்காமின் செய்தித் தொடர்பாளர்.
முன்னதாக 118 கோடியை உச்சநீதி மன்றத்தில் டெபாசிட் செய்திருந்தது ஆர்காம் நிறுவனம். அபராதத்துடன் 580 கோடியை எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கும் ஆளானது.
பணத்தை 4 வாரத்துக்குள் திருப்பி செலுத்தாவிட்டால் சிறை செல்ல நேரிடும் என கடந்த பிப்ரவரி 20-ம் தேதி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
அனில் அம்பானியின் இந்த கடினமான தருணத்தைப் புரிந்துக் கொண்ட, முகேஷ் தற்போது தம்பிக்கு உதவியுள்ளார்.