15வது நிதிக்குழு: தவறான நிதி கொள்கையால் மோசமாக வஞ்சிக்கப்படும் தமிழகம், கேரளா!

15-வது நிதிக்குழுவை அமைக்க ஒப்புதல் அளித்தது. இதன் தலைவராக முன்னாள் வருவாய் மற்றும் செலவினங்கள் துறை செயலாளர் என்.கே.சிங் செயல்படுவார்.

மத்திய அமைச்சரவை கடந்தாண்டின் இறுதியில் 15-வது நிதிக்குழுவை அமைக்க ஒப்புதல் அளித்தது. இதன் தலைவராக முன்னாள் வருவாய் மற்றும் செலவினங்கள் துறை செயலாளர் என்.கே.சிங் செயல்படுவார். இந்த நிதிக்குழு 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் துவங்கி ஐந்தாண்டுகளுக்கு செயல்படும்.

நாட்டின் வரி வருவாய் மூலங்களை ஆராய்ந்து, அவ்வரிகளின் மூலம் வரும் வருவாயை மாநிலங்களுக்கிடையே பகிர்வதற்கு தேவையான வரைவு கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை பரிந்துரை செய்வதே நிதிக்குழுவின் முக்கிய பணியாகும். இந்த முறை அமைக்கப்பட்டுள்ள நிதிக்குழுவானது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாயின் மீது ஜிஎஸ்டி ஏற்படுத்திய தாக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அந்நிதிக்குழு அனைத்து செய்தித்தாள்களிலும், மாநிலங்களுக்கிடையே வரி வருவாயை பகிர்வது குறித்த பரிந்துரைகளை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அனுப்பலாம் என விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரங்கள் அனைத்தும், யாரும் பார்த்துவிடக்கூடாது என்ற ரீதியில் சிறியதாக இருந்தது. ஏனென்றால், அவ்வாறு பரிந்துரைகளை அனுப்புபவர்கள், 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே பரிந்துரை அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததுதான் காரணம்.

வரி வருவாய் பங்கீட்டுக்கு முற்றிலும் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையின்படியே முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது செயல்பட்டு வரும் 14-வது நிதிக்குழுவானது, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, 10 சதவீத புள்ளி மதிப்பு (weightage) என்ற ரீதியில் சிறியளவில் கணக்கில் எடுத்துக்கொண்டது. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன.த

அதற்கு முந்தைய 13வது நிதிக்குழு, 1971-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வரிவருவாய் பங்கீடுக்கான வரைமுறைகளை அளித்தது. 1971-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தான், இந்தியாவில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட கடைசி கணக்கெடுப்பு. இதன் அடிப்படையில்தான் மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது.

நம் நாட்டில் நிலவும் அரசியல் கருத்தொற்றுமை என்னவென்றால், நாட்டின் தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கீட்டை கோர முடியாது என்பதுதான். அதுவும், அவ்வளவு தீவிரமாக குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தியபிறகு.

1971-2011 இந்த 30 ஆண்டு கால இடைவெளியில், கேரளாவின் மக்கள் தொகை 56 சதவீதமும், தமிழ்நாட்டின் மக்கள் தொகை 75 சதவீதமும் அதிகரித்தது. இது, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான சதவீதமாகும். மற்ற பல மாநிலங்கள் 100 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தொகை வளர்ச்சியை இந்த 30 ஆண்டு காலத்தில் எட்டியிருந்தன.

இந்த 30 ஆண்டுகால இடைவெளியில், தமிழ்நாட்டில் 20 மில்லியன் பேர் அதிகரித்திருக்கின்றனர். அதேபோல், கேரளாவில், 10 மில்லியன் மக்கள் கூடுதலாக சேர்ந்திருப்பர். இதனிடையே, மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் இணைந்து 50 மில்லியன் பேர் இணைந்திருப்பர். இந்த மாநிலங்களில் ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பானது மாநிலங்களிடையே பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், அதன்படி வரி வருவாயை பங்கீடு செய்வது தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மிகவும் நியாயமற்றதாகிறது.

13 வது நிதிக்குழுவின் ஒதுக்கீட்டு விகிதத்துடன் ஒப்பிடுகையில், 14-வது நிதிக்குழுவின் வரைமுறையால் (Formula)
தமிழ்நாடு 19 சதவிகிதம் வரி வருவாயை இழக்க நேரிட்டது.

அதாவது, 6,000 கோடி வரி வருவாயை தமிழகம் இழந்தது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படைக்கு 10 சதவீதம் புள்ளி மதிப்பு (formula) வழங்கியதே இதற்குக் காரணம்.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு 10 சதவீத புள்ளி மதிப்பு வழங்கியபோதே தமிழகத்திற்கு பாதிப்பு பூதாகரமானதாக இருந்தது. இந்நிலையில், 15வது நிதிக்குழுவில் வரிவருவாய் பங்கீடு முழுவதும் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே நிகழும் என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழகம் எத்தகைய பாதிப்புகளை சந்திக்கும் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட கடினமாக உள்ளது. 13-வது நிதிக்குழுவின் ஒப்பீடு விகிதத்துடன் ஒப்பிடுகையில், 70 சதவீத இழப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் தற்போதைக்கு கணித்துள்ளனர்.

குடும்ப கட்டுப்பாடு திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், கருவுறுதலுக்கான சாத்தியங்களை இழந்ததற்கும் புள்ளி மதிப்பு வழங்கினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலாம் என துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர். இது கணக்கியல் ரீதியாக மிகவும் சிக்கலானது.

அரசின் திட்டமான குடும்ப நல திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிய தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களை இந்திய அரசு ஏன் இத்தனை கடுமையாக தண்டிக்கிறது?

மதிய உணவு திட்டம் உட்பட பல முன்மாதிரி திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தமிழகம் சிறந்ததொரு மாநிலமாக திகழ்கிறது. கேரளாவுக்கு இணையாக பெண் கல்வியில் தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஆனால், வட மாநிலங்களில் இத்தகைய நலத்திட்டங்கள் இல்லாமல் கல்வியை நோக்கி பெண் குழந்தைகள் செல்வது இன்னும் தடையாகவே உள்ளது. குடும்ப நல திட்டத்தை செயல்படுத்தாமல், பெண் கல்வியை மேம்படுத்தாமல் போனதால் அத்தகைய மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இப்படி, அனைத்திலும் முன்மாதிருயாக திகழக்கூடிய தமிழகம் மற்றும் கேரளாவை மத்திய அரசு ஏன் வஞ்சிக்கிறது?

நன்றி: thewire.in

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close