Advertisment

வாரணாசியில் மோடி வேட்புமனு; முன்மொழிந்தவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல்; முன்மொழிந்தவர்கள், பிராமணர், ஓ.பி.சி, மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்; தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவரும் ஒருவர்

author-image
WebDesk
New Update
modi nomination

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்தார். (PTI புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Asad Rehman

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரை முன்மொழிந்த 4 பேர் யார் என்ற தீவிர ஆர்வம் சூழ்ந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: The four who proposed PM Modi’s candidature: Vedic scholar to BJP-RSS old-timers

பிரதமர் மோடியை முன்மொழிந்தவர்கள், பிராமணர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதை மனதில் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். முன்மொழிந்தவர்களில் மூவர் பின்னணியில் இருந்தபோதும், ஜோதிடரும் பிராமணருமான கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது பிரதமர் தரப்பில் இருந்தார்.

பிரதமருடன் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச பா.ஜ.க தலைவர் பூபேந்திர சவுத்ரி, முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், புஷ்கர் சிங் தாமி, மோகன் யாதவ் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். 

முன்மொழிந்த 4 பேரின் விபரங்கள் இங்கே:

கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட்

கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் (66), புகழ்பெற்ற வேத அறிஞரும் வாரணாசியின் ராம் காட் பகுதியில் வசிப்பவரும் ஆவார். கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட்க்கு ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான “முகூர்த்தம் (நற்காலம்)”, ஆகஸ்ட் 2020 இல் கோயிலுக்கான “பூமி பூஜை” மற்றும் பிப்ரவரி 2022 இல் காசி விஸ்வநாத் நடைபாதையை தீர்மானிக்கும் பணி முன்பு வழங்கப்பட்டது. பா.ஜ.க உள்விவகாரங்களின்படி, "வட மற்றும் தென்னிந்தியாவின் இந்துக்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கும்" ஒரு யோசனையுடன் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்த நேரத்தை முடிவு செய்யும்படி கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட்டிடம் கேட்கப்பட்டது.

தமிழ்நாட்டின் திருவிசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட்டின் முன்னோர்கள் 19ஆம் நூற்றாண்டில் வாரணாசிக்கு குடிபெயர்ந்தனர். ராம்காட்டில் ஸ்ரீ வல்லபிரம் ஷாலிகிராம் சங்வேத் வித்யாலயாவை நிறுவிய பெருமை அவரது தந்தை லக்ஷ்மண் சாஸ்திரிக்கு உண்டு.

ஜோதிட அறிவைத் தவிர, கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் கிருஷ்ண யஜுர்வேதம், சுக்ல யஜுர்வேதம் மற்றும் நியாய சாஸ்திரம் ஆகியவற்றில் நிபுணத்துவத்திற்காக அறியப்படுகிறார்.

சஞ்சய் சோங்கர்

50 வயதான சஞ்சய் சோங்கர் பா.ஜ.க.,வின் வாரணாசி பிரிவில் ஜிலா மகாமந்திரி ஆவார். சஞ்சய் சோங்கர் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்ட சோன்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியைச் சந்தித்த பிறகு அவர் கவனிக்கத்தக்கவராக இருந்து வருகிறார். சஞ்சய் சோங்கர் வாரணாசியில் வசிப்பவர் மற்றும் பா.ஜ.க.,வில் நீண்டகாலமாக இருந்து வருகிறார்.

லால்சந்த் குஷ்வாஹா

ஜவுளிக்கடை ஒன்றின் உரிமையாளரான, 65 வயதான லால்சந்த் குஷ்வாஹா, ஓ.பி.சி குஷ்வாஹா சாதியைச் சேர்ந்தவர் மற்றும் வாரணாசியின் கண்டோன்மென்ட் பகுதியில் வசிப்பவர். லால்சந்த் குஷ்வாஹா பா.ஜ.க.,வின் வாரணாசி மண்டல பொறுப்பாளராக உள்ளார்.

பைஜ்நாத் படேல்

பைஜ்நாத் படேல் நீண்டகாலமாக ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து வருபவர் மற்றும் ஜனசங்கத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். வாரணாசியின் சேவாபுரி பகுதியில் வசிக்கும் பைஜ்நாத் படேல் ஓ.பி.சி சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் முன்பு ஹர்ஷோஷ் கிராமத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Varanasi Bjp Pm Modi Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment